நெல்லை பாஸ்போர்ட் மையத்தில் "சேவை' குறைபாடு!

திருநெல்வேலி, டிச. 9: திருநெல்வேலியில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லையெனவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் விண்ணப்பத
Updated on
2 min read

திருநெல்வேலி, டிச. 9: திருநெல்வேலியில் தனியார் பங்களிப்புடன் தொடங்கப்பட்டு செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் சேவை மையத்தின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லையெனவும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் விண்ணப்பதாரர்கள் மழையிலும், வெயிலிலும் நிற்கும் அவல நிலை நீடித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்த திருநெல்வேலி மாவட்ட பாஸ்போர்ட் அலுவலகம், கடந்த ஆண்டு மதுரையில் தொடங்கப்பட்ட மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த பாஸ்போர்ட் அலுவலகப் பிரிவுகளில் ஆன்லைன் பதிவு நடைபெற்று வந்தது. இந்நிலையில், தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம் கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பஸ் நிலையம் அருகே தொடங்கப்பட்டது.

இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகப் பிரிவில் ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்பட்டது. பாஸ்போர்ட் சேவை மையத்தில் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பங்கள், பாஸ்போர்ட் புதுப்பித்தல், ஏற்கெனவே எடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பெயர் சேர்ப்பு (திருமணத்திற்குப் பின், கணவன் அல்லது மனைவி பெயர் சேர்த்தல்) உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிதாக பாஸ்போர்ட் தேவைப்படுவோருக்கு இம்மையத்திலேயே புகைப்படமும் எடுக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்களின் ஆவணங்களை சரிபார்க்க பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாஸ்போர்ட்டுக்காக ஆன்லைன் பதிவு செய்யப்படும்போது, நேர்காணல் தேதியை (ஆவணங்களுடன் இம்மையத்துக்கு வர வேண்டிய தேதி) ஆன்லைன் மூலமாகவே தெரிந்துகொள்ளலாம்.

ஆனால், பாஸ்போர்ட் சேவை மையத்தை ஆன்லைன் மூலமாக தொடர்புகொண்டு பதிவு செய்யும்போது, நேர்காணல் தேதி கிடைக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் பலரும் அவதிப்படுகின்றனர். இம்மையத்தில் தினமும் 100 விண்ணப்பங்களுக்கு மட்டுமே நேர்காணல் தேதி வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகப் பிரிவில், மீண்டும் புதிதாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களிடமிருந்து நேரடியாக விண்ணப்பப் படிவங்கள் பெறப்படுகின்றன. (இங்கு ஆன்லைன் பதிவு கிடையாது).

வேறு எந்த வசதிகளும் இல்லாததால் பாஸ்போர்ட் சேவை மையத்தை மட்டுமே விண்ணப்பதாரர்கள் நம்பிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள தங்களது பிள்ளைகளை பார்க்க வேண்டும் என பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் முதியவர்கள் நீண்ட வரிசையில் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் நீடித்து வருகிறது. பாஸ்போர்ட் சேவை மையத்துக்கு வரும் விண்ணப்பதாரர்கள் சிறுநீர் கழிக்கக்கூட ஒரு வசதியும் செய்யப்படாமல் உள்ளது.

இந்த பாஸ்போர்ட் சேவை மையத்தில் பணிபுரிவோரில் பெரும்பாலானோர் புதுமுகங்கள் என்றும், முறையான அனுபவம் இல்லாதவர்களே அதிகளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மாலை நேரத்தில் நேர்காணல் செய்வோரை காலையிலேயே வரவழைப்பதாகவும், எந்த அடிப்படை வசதிகளும் முறையாக செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவை மைய அதிகாரிகளிடம் விண்ணப்பதாரர்களின் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டபோது தங்களுக்கு எதுவும் தெரியாது, எந்தத் தகவல் வேண்டுமானாலும் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என மழுப்பலான பதிலை தெரிவித்தனர்.

மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலத்தை தொடர்பு கொண்டால், அவர்களும் முறையான பதிலை அளிக்க முன்வரவில்லை.

இந்த விஷயத்தில் பாஸ்போர்ட் மண்டல அலுவலக அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு பிரச்னைகளுக்கு முடிவு காண வேண்டும் என்பதே விண்ணப்பதாரர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com