7 ஆண்டாக மூடிக் கிடக்கும் பேட்டை நூற்பாலை

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி பேட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும்  கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்தப் பகுதி மக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விட
Updated on
2 min read

திருநெல்வேலி, டிச. 13: திருநெல்வேலி பேட்டையில் கடந்த 7 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும்  கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அந்தப் பகுதி மக்கள், தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆலை  இயக்கப்பட்டால் ஏறத்தாழ 2,000 பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 கூட்டுறவு நூற்பாலைகளில் தற்போது 5 நூற்பாலைகள்  மட்டுமே இயங்கி வருகின்றன. மீதியுள்ள 13 நூற்பாலைகளும் பல்வேறு காரணங்களால் இயக்கப்படவில்லை. இதனால், 5,888 தொழிலாளர்களும், 152 அலுவலர்களும்  வேலையிழந்துள்ளனர். இதில், பேட்டை கூட்டுறவு நூற்பாலையும் ஒன்றாகும்.

திருநெல்வேலி சந்திப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள  பேட்டையில் காமராஜர் முதல்வராக இருந்தபோது

1958-ம் ஆண்டு தென்னிந்திய  கூட்டுறவு நூற்பாலை தொடங்கப்பட்டது.

இந்த ஆலை மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, 1968-ம் ஆண்டு கூடுதலாக ஒரு யூனிட் ஆரம்பிக்கப்பட்டது.  இரு யூனிட்டுகளிலும் சேர்த்து 2,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1,000 பேர்  மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றனர்.

தொடக்கத்தில் அரசுக்கு மாதம் ரூ.50 லட்சம் வரை லாபத்தை சம்பாதித்துக் கொடுத்த இந்தக் கூட்டுறவு நூற்பாலை, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகவும், அரசு  அதிகாரிகள் சிலரின் நிர்வாகத் திறமையின்மையாலும் இழப்பைச் சந்திக்கத் தொடங்கியது.

இந்நிலையில், 2004-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நூற்பாலை முழுவதுமாக  மூடப்பட்டது. இங்கு வேலைபார்த்த தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு  போன்ற நகரங்களுக்கு குடிபெயரத் தொடங்கினர். வெளியூர் செல்ல விரும்பாதவர்கள்  கூலி வேலைக்குச் செல்லத் தொடங்கினர்.

ஆலை மூடப்பட்டு 7 ஆண்டுகள் ஆகிவிட்டதால் நூற்பாலை இயந்திரங்கள் அனைத்தும் பழுதான நிலையில் காணப்படுகின்றன. விலை உயர்ந்த இயந்திரங்கள் திருட்டுப்  போனதாகவும் புகார் எழுந்தது.

இந்நிலையில், நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு  முன்னர் திமுக ஆட்சியில் அப்போதைய கைத்தறித் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் மாலைராஜா ஆகியோர் நூற்பாலையில்  ஆய்வு மேற்கொண்டனர்.

ஆலையில் உள்ள "பி' பிரிவு யூனிட்டை திறக்க ஏறத்தாழ 5 கோடி ரூபாய் செலவு  செய்தால் போதும் என்றும், தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் உடனடியாக ஆலை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட நூற்பாலை தற்போது பாழடைந்த நிலையில்  வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. இந்த ஆலையை கடந்து  செல்லும்போதெல்லாம் கண்ணீர் வருவதாகக் கூறுகின்றனர் ஆலையில் பணியாற்றி  வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்.

இந்நிலையில், மூடப்பட்ட சில நூற்பாலைகளை கடந்த சில நாள்களுக்கு முன்னர்  ஆய்வு மேற்கொண்ட மாநில கைத்தறித் துறை அமைச்சர் எஸ். சுந்தர்ராஜ், தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் 5 நூற்பாலைகளையும் லாபத்தில் இயங்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதேபோல, மூடப்பட்டுள்ள நூற்பாலைகளை திறப்பதற்கான விவரங்களை  முதல்வரிடம் தெரிவிப்பேன்; முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்றும்  அமைச்சர் சுந்தர்ராஜ் குறிப்பிட்டிருந்தார்.

பேட்டை கூட்டுறவு நூற்பாலையைப் பொறுத்தவரை ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டால் ஏறத்தாழ 800 தொழிலாளர்கள்  வேலைபார்க்கும் அளவுக்கு ஆலையை இயக்க முடியும்.

அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நூற்பாலையை முழுவதுமாக இயக்க நடவடிக்கை மேற்கொண்டால் ஏறத்தாழ 2,000 தொழிலாளர்களுக்கு நேரடியாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

"1958-ல் தொடங்கப்பட்ட நூற்பாலையின் "ஏ' பிரிவில் 17,600 கதிர்முனைகள் உள்னள. 53 ஆண்டுகள் கழிந்துவிட்டதால் அந்த யூனிட்டை புதுப்பிக்க வாய்ப்பு இல்லை.  ஆனால், 32,480 கதிர்முனைகளைக் கொண்ட "பி' பிரிவு யூனிட் செயல்படும் அளவுக்கு உள்ளது. இந்த யூனிட்டை புதுப்பித்தால் ஒரு கதிர்முனையில் இருந்து 70 கிராம் நூல்வரை எடுக்க வாய்ப்பு உள்ளது' என்றார் அவர்.

இந்த நூற்பாலையைத் திறக்க வேண்டும் என நீண்ட நாள்களாகப் போராடி வரும்  அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் அமைப்பின் மாவட்ட துணைச் செயலர்  என். செல்வகணபதி கூறியது:

"பேட்டை நூற்பாலையைத் திறக்க வேண்டுமானால் முதலில் ரூ.5 கோடி செலவு  செய்தால் போதும். ரூ.5 கோடி என்பது அரசுக்கு பெரிய தொகை கிடையாது. அரசு  மனது வைத்தால் இந்த ஆலையை மீண்டும் செயல்படச் செய்து தொழிலாளர்களுக்கு  வேலைவாய்ப்பை வழங்க முடியும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com