திருநெல்வேலி, பிப். 22: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்துக்கு சுயநலவாதிகள் மற்றும் விளம்பர பிரியர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அமல்படுத்த காவல் துறையினரும் தயக்கம்காட்டி வருவதால் அந்த இடம் கட்டுப்பாடற்ற பகுதி போலவும் காட்சி அளிக்கிறது.
பொதுமக்கள் தங்களின் நியாயமான குறைகளை மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நிவாரணம் பெற வசதியாக ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
ஆட்சியர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். ஆட்சியரிடம் மனு அளிக்க வருவோர் முதலில் மனுவை பதிவு செய்து பின்னர் ஆட்சியரிடம் அளிப்பர். மனுவை ஆட்சியர் பரிசீலித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பார்.
மிக முக்கியமான பிரச்னையாக இருக்கும்பட்சத்தில் அங்கு இருக்கும் அதிகாரியை அழைத்து உடனே விவரத்தை தெரிவித்து நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிடுவார்.
(முன்பெல்லாம் கூட்டத்துக்கு மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் சிலர் வருவதில்லை. அவர்களுக்குப் பதிலாக கீழ்நிலை அதிகாரிகளை அனுப்பிவைப்பர். ஆட்சியராக மு. ஜெயராமன் பொறுப்பேற்ற பின்பு அத்தகைய அதிகாரிகளைக் கடிந்து கொண்டதோடு, அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொண்டார். அதனால் இப்போது பெரும்பாலான அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு வந்து விடுகின்றனர்.)
குறைதீர் நாள் கூட்டத்துக்கு கிராம மக்கள் அதிகமானவர்கள் வந்து மனு கொடுப்பதுண்டு. குடிநீர், சாலை வசதி, கழிவு நீரோடை, பஸ் வசதி, அரசின் இலவச டி.வி., சமையல் எரிவாயு அடுப்பு, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா போன்றவற்றுக்கான மனுக்கள் அதிகம் வருகின்றன. பொதுஇடம் ஆக்கிரமிப்பு, சாதி மோதல் சூழ்நிலை போன்ற பிரச்னைகள் குறித்தும் பொதுமக்கள் மனுக்களை அளிப்பதுண்டு.
சுயநல கும்பல்: அண்மைக்காலமாக ஆட்சியரிடம் மனுக் கொடுக்க சிலர் கிராம மக்களைக் கூட்டம் கூட்டமாக அழைத்து வருகின்றனர். சிலர் வாகனங்களிலும் அழைத்து வருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் நபர் ஆட்சியர் அலுவலக வளாகத்துக்குள் நுழைந்த உடன் அங்கு நிற்கும் ஊடக பிரதிநிதிகளை அணுகி முதலில் அவர்களிடம் மனுக்களை அளிக்கின்றனர். பின்னர் தாம் அழைத்து வந்தவர்களை ஒன்று கூட வைத்து அவர்களும் முன்னால் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். அதன் பின்பு அவர்கள் அந்த மனுவை ஆட்சியரிடம் கொடுப்பார்களா, இல்லை என்பது தெரியாது. விழிப்புணர்வு இல்லாத கிராம மக்களை அழைத்து வந்து அவர்கள் பயன்பெற உதவுவதில் தவறு காண முடியாது.
ஆனால், சிலர் அவ்வாறு கிராம மக்களை வாகனங்களில் அழைத்து வரவும், ஆட்சியரிடம் மனுக் கொடுக்கவும், அந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவரவும் எனக் கூறி கணக்குப்போட்டு ஆளுக்கு ஒரு தொகையை வசூல் செய்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த வேலையை அந்த ஊரில் உள்ள அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவரோ அல்லது தொண்டு நிறுவன பிரதிநிதி எனக் கூறி கொள்பவரோ அல்லது ஏதேனும் ஒரு "விவரம் தெரிந்த நபர்' மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.
இன்னும் சிலர், அரசு நலத்திட்ட உதவிகளில் ஏதேனும் ஒன்றைக் கூறி ("லேட்டஸ்ட்' வீட்டுமனைப் பட்டா) அதை உடனே பெற்றுத் தருவதாக அழைத்து வந்து அவர்களை முன்னிறுத்தி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே ஒரு மினி பேரணியை நடத்தி, கோஷம் போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டு இயக்கப் பணியை செய்யும் விளம்பர பிரியர்களும் அதிகரித்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களில் வீட்டுமனைப் பட்டா கேட்டு மனுக் கொடுத்துள்ளோர் எண்ணிக்கை மட்டும் சுமார் 8 ஆயிரத்தை தாண்டும் என்கின்றனர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்.
காவல்துறை அலட்சியம்:1999-ல் நிகழ்ந்த தாமிரபரணி சம்பவத்தையொட்டி ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியில் பேரணியோ, ஆர்ப்பாட்டமோ நடத்தக் கூடாது என மாநகர காவல்
துறையினர் தடை விதித்துள்ளனர்.
ஆனால், இன்னமும் திங்கள்கிழமைகளில் சில அமைப்பினர் அங்கு திடீர் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். எவ்வித கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. போலீஸôரும் அதை கண்டு கொள்வதில்லை.
மாறாக, சில வேளைகளில் காவல்துறையினர் போராட்டக்காரர்களுக்கு பாதுகாப்பு அளித்து அழைத்து சென்று மனுக் கொடுக்க வைக்கின்றனர். இந்த விதிமுறை மீறலுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருப்பதால் சில அரசு ஊழியர் சங்கங்கள்கூட இப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே போராட்டங்களை நடத்த துணிந்துள்ளனர்.
இதன் வெளிப்பாடாக, திங்கள்கிழமை யாதவர் அரசியல் விழிப்புணர்வு இயக்கத் தலைவர் எனக் கூறிக் கொண்ட ஒருவர் தான் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க போவதாக அறிவித்தார்.
மாநகர காவல்துறை துணை ஆணையர் அவினாஷ்குமார் தலைமையில் போலீஸôர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து வாசல்களிலும் காலைமுதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்கு பின்பு நான்கைந்து பேருடன் ஆட்டோவில் வந்து இறங்கிய அந்த நபர் எதுவும் அறியாதவர் போல கையைத் தூக்கி பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு "போஸ்' கொடுத்துவிட்டு கோரிக்கை மனுவை ஆட்சியருக்கு அஞ்சலில் அனுப்பிவிட்டதாக கூறிவிட்டு "ஹாயாக' சென்று விட்டார். அத்தனை நேரம் அங்கு வேகாத வெயிலில் காத்துநின்ற காவல்துறை அதிகாரிகள் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்து விட்டு எதுவுமே நடக்காதது போல அவர்களும் சென்று விட்டனர். இதற்கெல்லாம் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் ஒரு முடிவு கட்ட வேண்டாமா?
முகவர்கள் தேவை இல்லை
ஆட்சியரிடம் மனுக் கொடுக்க முகவர்களோ, இடைத்தரகர்களோ தேவை இல்லை. பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சியரிடம் நேரடியாக மனுக் கொடுக்கலாம். மனுவை நேரடியாக கொடுக்க வேண்டும் என்பதுகூட தேவையில்லை. "ஆன்லைன்' மூலமோ, தபால் மூலமோ கூட அனுப்பலாம். கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலங்களில் கூட மனுவை அளிக்கலாம். கோரிக்கை நியாயமாக இருக்கும்பட்சத்தில் சட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.