தென்காசி,ஜன.29: அரசு அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை விற்பனை செய்யவும், பத்திரம் பதிவு செய்யவும் அரசு தடைவிதிக்க வேண்டும். அதற்கேற்ப அரசு சட்டம் இயற்றி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
கனவு இல்லம் என்பது இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் அனைவருக்கும் அடிப்படை இலட்சியமாகிவிட்டது.
இப்போது திரும்பிய திசையெல்லாம் ரியல் எஸ்டேட் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. மாதத்துக்கு ரூ.300 கட்டினால் போதும். 10 ஆண்டுகள் கழித்து உங்களுடைய
கனவு இல்லத்துக்கு இடம் தயார் என்றும், பஸ் நிலையம் அருகில், ரயில்வே நிலையம் அருகில், முக்கியமான சுற்றுலாத்தலம் என்றால் அதன் அருகில் என நாள்தோறும் ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதுதவிர ஊருக்கு வெளியே புறநகர்ப் பகுதிகளிலும், விவசாய நிலங்களை அழித்தும் வீட்டுமனைகள்அமைக்கப்பட்டு விற்பனை ஜோராக நடைபெறுகிறது. புறநகர்ப் பகுதியில் அமைக்கப்படும் வீட்டுமனைகள் மிகவும் குறைந்த விலையில் விற்பனைக்கு உள்ளன எனக் கூறி வீட்டுமனைகளை வாங்குபவர்களை வாகனங்களில் அழைத்துச் சென்று இடத்தைக் காண்பித்து ஆர்வத்தைத் தூண்டுகின்றனர்.
சொந்தமான இடங்களை வாங்க விரும்பும் பயனாளிகளும், அந்தஇடம் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனையா,
அப்பகுதியில் வீடு கட்டினால் உள்ளாட்சி அமைப்புகள் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருமா? என யோசிக்காமல் பெருமளவில் பணத்தைக் கொடுத்து மனைகளை வாங்கி விடுகின்றனர்.
ஆனால் மனைகளை வாங்கியபிறகு, உள்ளாட்சி அமைப்புகளிடம் சென்று வீடுகட்டுவதற்கு அனுமதி கேட்கும்போதோ, குடிநீர் இணைப்பு, தெருவிளக்குகள், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைநிறைவேற்றித் தருமாறு கேட்கும் போதுதான் பிரச்னை ஏற்படுகிறது.
வீட்டுமனைகளை விற்பனை செய்பவர்கள் விவசாய நிலங்கள், பிரச்னைக்குரிய நிலங்கள் என எந்த நிலங்களாக இருந்தாலும் எளிதில் பயனாளிகளை ஏமாற்றி விற்பனை செய்து விடுகின்றனர். ஆனால் வீடுகட்டிய பிறகு அங்கு அடிப்படை வசதிகள் இல்லையென்றால் குடிபுகமுடியாது என்ற நிலையில் அந்த மனைகளை வாங்கியவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சிலமாதங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வீட்டுமனைகள் அரசு அங்கீகாரம் பெறவில்லை என மாவட்ட ஆட்சியரே எச்சரித்தும் கூட தொடர்ந்து, இதுபோன்று அங்கீகாரம் பெறாத வீட்டுமனைகள் விற்பனை தொடரத்தான் செய்கிறது.
அவ்வாறு விற்பனை செய்யப்படும் வீட்டுமனைக்கு உரிமையாளர் தான் தான் என மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதும், நீதிமன்றத்திற்குச் செல்வதும் இப்போது வாடிக்கையாகி விட்டது. உள்ளாட்சி அமைப்புகளிலிலிருந்து நகரின் முக்கியப் பகுதிகளிலும், வீட்டுமனைகளை புதிதாக போடும் இடங்களில் இந்த இடம் அரசு அங்கீகாரம் பெறவில்லை என்றும் விளம்பரம் செய்கின்றனர்.
மேலும் அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகளா என்பதைத் தெரிந்து கொண்டு பின் வீட்டுமனைகளை வாங்குமாறு விளம்பரங்களை செய்துள்ளனர். இந்த எச்சரிக்கை பலகைகள் சேதப்படுத்தி அகற்றப்படுகின்றன.
இதுபோன்று அங்கீகாரமற்ற வீட்டுமனைகளைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யச் செல்லும்போதே அரசின் அனுமதி பெற்ற வீட்டுமனைகள் என்பதற்கு உரிய சான்றுகளை பெற்றபின் பதிவு செய்யும் வகையில் அரசு உரிய சட்டம் இயற்ற வேண்டும்.
அப்போது தான் இதுபோன்ற அவலங்கள் தொடராதவாறு பொதுமக்களைப் பாதுகாக்க முடியும்.