திருநெல்வேலி, ஜூலை 21: திருநெல்வேலி மாவட்டத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு நிர்ணயித்த அளவைவிட குறைந்த அளவே மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாள்களாக பொதுமக்கள் காலி கேன்களுடன் ரேஷன் கடைகள்முன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரேஷன் கடைகளில் முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை என்பதுதான் போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டு.
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு இருப்பது உண்மைதான் என அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர். அரசிடம் இருந்து மாதந்தோறும் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு கடந்த 5 மாதங்களாக குறைந்ததுதான் தட்டுப்பாடு ஏற்பட காரணம் என்கின்றனர் அதிகாரிகள்.
பொதுவாக, மாநிலம் முழுவதும் மக்களுக்கு நான்கு பிரிவின் கீழ் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. மாநகராட்சிப் பகுதியில் வசிப்பவர்களுக்கு 2005-ம் ஆண்டுக்கு முன் குடும்ப அட்டை பெற்றவர்களாக இருந்து கேஸ் இணைப்பு இல்லாதவர்களாக இருந்தால் மாதம் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
ஒரு சிலிண்டருடன் கூடிய கேஸ் இணைப்பு இருந்தால் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும். நகராட்சிப் பகுதியில் கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு 6 லிட்டரும், ஒரு சிலிண்டருடன் கூடிய கேஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு 3 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
இதேபோல, பேரூராட்சி பகுதியில் கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கு 5 லிட்டரும், ஒரு சிலிண்டருடன் கூடிய கேஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு 3 லிட்டரும் மண்ணெண்ணெய் வழங்கப்படும்.
ஊராட்சிப் பகுதியில் ஒரு சிலிண்டருடன் கூடிய கேஸ் இணைப்பு உள்ளவர்களுக்கும், கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கும் தலா 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் 2 சிலிண்டர்களுடன் கூடிய கேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை.
இதேபோல, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு குடும்ப அட்டை பெற்றவர்களில் கேஸ் இணைப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் மட்டுமே வழங்கப்படும். 2 சிலிண்டர்களுடன் கேஸ் இணைப்பு இருந்தால் மண்ணெண்ணெய் கிடையாது.
கேஸ் இணைப்பு உள்ளவர்கள் பற்றிய முழுமையான விவரம் மாவட்ட நிர்வாகத்திடம் இல்லாததாலும், பழைய கணக்குப்படி மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுவதாலும், இப்போது குடும்ப அட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும் மண்ணெண்ணெய் முறையாக வழங்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், மக்களின் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் சில இடங்களில் இரண்டு மாதத்துக்கு ஒரு முறையும், சில இடங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட 2 லிட்டர் வரை குறைத்தும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது.
மண்ணெண்ணெய் பெறுவோரில் பெரும்பாலானவர்கள் ஏழைகள் என்பதால் வேறு வழியின்றி, கிடைக்கும் மண்ணெண்ணெயைப் பெற்றுச் செல்லும் நிலை இருந்து வருகிறது.
இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு மக்கள் புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.
மேலும், ரேஷன் கடைகளில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.11.50 முதல் 12 வரையிலான விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படுகிறது. ஆனால், வெளிச் சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ. 35 முதல் 50 வரை விற்கப்படுகிறது.
ரேஷன் பொருள்களைக் குறைந்த விலைக்கு பெற்று அதிக விலைக்கு விற்கும் வேலைக்காகவே ஏராளமான இடைத்தரகர்கள் உள்ளனர். இவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால் "செயற்கையான' மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஓரளவு குறைய வாய்ப்பு உள்ளது.
ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவையும் பொதுமக்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
ரேஷன் பொருள்கள் தட்டுப்பாடு குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
"திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 8,33,968 குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்ய மாதத்துக்கு 20.77 லட்சம் லிட்டர் மண்ணெண்ணெய் அரசு ஒதுக்கீடு செய்வது வழக்கம்.
ஆனால், கடந்த 5 மாதங்களாக 17 லட்சம் லிட்டர் வரை மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதனால், ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மண்ணெண்ணெய் முறையாக வழங்க முடியவில்லை. இதேபோல, கடந்த சில மாதங்கள் வரை பாமாயில், துவரம் பருப்பு ஆகியவற்றின் இருப்பு குறைவாக இருந்தது.
இப்பொழுது போதுமான இருப்பு இருப்பதால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பொருள்கள் முறையாக அனுப்பி வைக்கப்படுகின்றன.
மண்ணெண்ணெய் தட்டுப்பாட்டை பொறுத்தவரை இன்னும் ஓரிரு மாதத்தில் சரியாகிவிடும்' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.