திருநெல்வேலி, ஜூன் 3: திருநெல்வேலி மாவட்ட திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக திகழும் திமுக பிரமுகர்கள் தங்களது வாரிசுகளை முன்னிறுத்தும் படலத்தை ஓசையின்றி செயல்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த போதிலும், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் வழக்கம்போலவே விமர்சையாக கொண்டாடப்படும் என்ற எதிர்பார்ப்பு தொண்டர்கள் மத்தியில் இருந்தது.
ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மிகவும் பரபரப்புடன் கொண்டாடப்பட்ட கருணாநிதியின் பிறந்தநாள், இந்த ஆண்டு ஒரு சில இடங்களில் நடைபெற்ற எளிமையான விழாக்களோடு முடிந்துவிட்டது.
சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையில் கருணாநிதியை சந்தித்துவிட்டு, உடனடியாக திருநெல்வேலி திரும்பி பல விழாக்களில் பங்கேற்கும் பழக்கம் கொண்ட மாலைராஜா இந்தமுறை எந்த விழாவிலும் பங்கேற்கவில்லை.
இதேபோல, மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சரான டி.பி.எம். மைதீன்கான் ஆகியோரும் திருநெல்வேலியில் நடைபெற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவில்லை.
ஆனால், திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருணாநிதி பிறந்தநாள் விழாவில், மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியனின் வாரிசான வி.கே.பி. சங்கரும், மேயர் அ.லெ. சுப்பிரமணியனின் வாரிசான அ.லெ.சு. லட்சுமணனும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வு மூலம், திருநெல்வேலி மாவட்டத்தில் திமுக பிரமுகர்கள் தங்களது வாரிசுகளை முன்னிறுத்தும் படலத்தை ஓசையின்றி செயல்படுத்தத் தொடங்கிவிட்டதாகவே தொண்டர்கள் தங்களுக்குள் பேசத் தொடங்கியுள்ளனர்.
ஏனென்றால், திருநெல்வேலி மாவட்ட திமுகவைப் பொறுத்தவரை அசைக்க முடியாத சக்திகளாகவும், தவிர்க்க முடியாதவர்களாகவும் திகழ்பவர்கள் மூவர். ஒருவர் சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா. ஆவுடையப்பன். மற்றவர் தற்போதைய மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன். மூன்றாமவர் "ஏ.எல்.எஸ்.' என்று அழைக்கப்படும் மாநகராட்சி மேயர் அ.லெ. சுப்பிரமணியன்.
திமுகவின் முப்பெரும் தலைவர்களாக இவர்கள் தற்போது முதுபெறும் தலைவர்களாகிவிட்டனர் என்றே கூறலாம். திமுகவின் நீண்ட நாள்களாக கோலோச்சிய இவர்கள், தற்போது ஓய்வு எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால், தாங்கள் இருந்த "பொறுப்புகள்' தங்களது வாரிசுகளால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்ற "தலைமை' பற்று இவர்களுக்கும் இல்லாமல் இல்லை. இதனால், அண்மைக்காலங்களாக தங்களது வாரிசுகளை மூவரும் அரசியலில் களமிறக்கத் தொடங்கிவிட்டனர்.
எந்தத் தேர்தல் வந்தாலும் சரி, இந்த மூவரின் பெயரோ, அல்லது அவர்களது குடும்பத்தாரின் பெயரோ கண்டிப்பாக இடம்பெறுவது உண்டு. 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் இப்படிதான்.
மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியன் தென்காசி தொகுதியிலும், இரா. ஆவுடையப்பன் அம்பாசமுத்திரம் தொகுதியிலும், ஏ.எல்.எஸ். மகன் அ.லெ.சு. லட்சுமணன் திருநெல்வேலி தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியை தழுவினர்.
அதிமுகவில் இருந்த கருப்பசாமி பாண்டியன் திமுகவுக்கு வரும் வரை மாவட்டச் செயலராக இருந்த இரா. ஆவுடையப்பன் கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டப்பேரவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மாவட்டச் செயலர் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டவுடனேயே, தனது வாரிசான ஆ. பிரபாகரனை மாவட்ட அளவில் கட்சியில் ஏதாவது ஒரு பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார் ஆவுடையப்பன். இருப்பினும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு பொறுப்பு கிடைக்காதபோதிலும், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர் பொறுப்பை தனது மகன் பிரபாகரனுக்கு பெற்றுத் தந்தார். இன்றுவரை அந்த பொறுப்பில் பிரபாகரன் தொடர்கிறார். பிரபாகரனின் அரசியல் பிரவேசம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. வருங்காலங்களில் ஆவுடையப்பனின் இடத்தை பிரபாகரனே நிரப்புவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதேபோல, மேயர் அ.லெ. சுப்பிரமணியனின் இடத்தை அவரது மகன் அ.லெ.சு. லட்சுமணனும், மாவட்டச் செயலர் வீ. கருப்பசாமி பாண்டியனின் இடத்தை திருத்து பகுதி கழகச் செயலர் பொறுப்பில் இருக்கும் அவரது மகன் வி.கே.பி. சங்கரும் நிரப்ப தயாராகிவிட்டனர்.
"கட்சிக்கு புது ரத்தம்' என்ற பெயரில் வருங்காலங்களில் திமுக நிகழ்ச்சிகளில் மூவரின் வாரிசுகளும் பங்கேற்கும் அளவுக்கு முன்னிறுத்தப்படுவதாகவே கட்சியின் நீண்ட கால தொண்டர்கள் கருதுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.