"தலைமை' இன்றி தவிக்கும் கல்வித் துறை அலுவலகங்கள்

திருநெல்வேலி, ஜூன் 9: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய கல்வித் துறை அலுவலகங்களில் தலைமைப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிக
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூன் 9: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய கல்வித் துறை அலுவலகங்களில் தலைமைப் பொறுப்புகள் காலியாக இருப்பதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.

ஆனால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கியமான கல்வித் துறை அலுவலகங்களில் தலைமைப் பதவிகள் நீண்டகாலமாகவே காலியாக உள்ளதால், கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

முதன்மைக் கல்வி அலுவலர்: மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் கண்காணிக்கும் பொறுப்பு கொண்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் கடந்த 3 மாதங்களாக நிரப்பப்படாமல் உள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த மேரி ஜெஸி ரோச் பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான சசிகலா இப்போது கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டிய பணிகளை மேற்கொள்ள வேண்டியது முதன்மைக் கல்வி அலுவலரின் பணி. இதுதவிர, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்த்துவைப்பதும் முதன்மைக் கல்வி அலுவலர்தான்.

மேலும், பள்ளிகளுக்குத் தேவையான பாடப்புத்தகங்களை அனுப்பும் பணியையும் முதன்மைக் கல்வி அலுவலர்தான் பொறுப்பாகச் செய்ய வேண்டும்.

பள்ளிகள் திறக்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் முதன்மைக் கல்வி அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால் பணிகள் மேலும் பாதிக்கக்கூடும் என கல்வித் துறை அதிகாரிகள் அச்சமடைந்துள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலர்: முதன்மைக் கல்வி அலுவலருக்கு அடுத்தபடியாக கல்வி மாவட்ட அளவில் தலைமைப் பொறுப்பில் இருந்து பள்ளிகளைக் கண்காணிப்பது மாவட்ட கல்வி அலுவலர்கள்.

திருநெல்வேலி மாவட்டத்தைப் பொறுத்தவரை திருநெல்வேலி, சேரன்மகாதேவி, தென்காசி என மூன்று கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில், தென்காசி கல்வி மாவட்ட கல்வி அலுவலராக ஜெயக்கண்ணு உள்ளார்.

திருநெல்வேலி கல்வி மாவட்ட அலுவலராகப் பணியாற்றிய கோலப்ப பிள்ளை பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, பொறுப்பு அலுவலராக பத்மாவதி உள்ளார். கடந்த மூன்று மாதங்களாக பத்மாவதி பொறுப்பை கவனித்து வருகிறார்.

சேரன்மகாதேவி கல்வி மாவட்ட அலுவலர் பணியிடமும் கடந்த 2 மாதங்களாக காலியாக உள்ளது. கிரேஸ் அன்ன ஹெலீனா பொறுப்பு அலுவலராகச் செயல்பட்டு வருகிறார்.

அனைவருக்கும் கல்வி இயக்கம்: இதேபோல, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த ஜெசோலைட் செல்வி பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக இந்தப் பணியிடம் காலியாக உள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலரான பகவதி கூடுதலாக திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அலுவலராகச் செயல்பட்டு வருகிறார்.

மத்திய அரசின் திட்டங்கள் அடிப்படையில் பள்ளிகளில் கூடுதல் கட்டடங்கள் கட்டுவது, செயல்வழிக் கற்றல் திட்டத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகளும் இந்த அலுவலகத்தின் கீழ் வரும் என்பதால் உடனடியாக பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்படும் பாளையங்கோட்டையை உள்ளடக்கிய திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய கல்வித் துறை அலுவலகங்களில் தலைமைப் பதவியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com