அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள்

திருநெல்வேலி, ஜூன் 13: திருநெல்வேலியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.  கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கி
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூன் 13: திருநெல்வேலியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் மக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.

 கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் புதன்கிழமை (ஜூன் 15) திறக்கப்படுகின்றன.  இதனால், விடுமுறை நாள்களைக் கழிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்தவர்கள் தங்கள்  வசிப்பிடங்களுக்கு திரும்பத் தொடங்கிவிட்டனர்.

 திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தோர் சென்னையில் அதிகளவில்  வசிப்பதால், சென்னை செல்வதற்கு பயணச்சீட்டு பெற மக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

 திருநெல்வேலியில் இருந்து சென்னை, கோவை, பெங்களூர் ஆகிய பகுதிகளுக்குச்  செல்லும் அனைத்து பஸ்களிலும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இருந்தே கூட்டம்  அதிக அளவில் காணப்பட்டது. பஸ்களில் இடம் கிடைக்காமல் ஏராளமானோர்  தவிப்புக்குள்ளாகினர்.

 இதேபோல, ரயில் நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமை அளவுக்கு அதிகமான கூட்டம்  காணப்பட்டது. தென்மாவட்டங்களில் இருந்து சென்னை செல்லும் ரயில்களில் ஜூன்  30-ம் தேதி வரை இடம் இல்லை. தத்கால் முறையில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே  பயணச்சீட்டு கிடைக்கிறது.

 ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்து நாடுவது அரசு விரைவு பஸ்களைதான். ஆனால், வழக்கத்துக்கு மாறாக அரசு பஸ்களில் இப்போது அதிகக் கூட்டம்  காணப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து சென்னை செல்ல அரசு பஸ்களிலும் ஜூன்  மாத இறுதிவரை முன்பதிவு முடிந்துவிட்டது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க  திருநெல்வேலி- சென்னை இடையே 10 சிறப்பு பஸ்கள் இயக்க முடிவு  செய்யப்பட்டுள்ளது.

 ரயில்கள், அரசு பஸ்கள் என இரண்டிலும் இடம் கிடைக்காதவர்கள் மூன்றாவதாக  நாடுவது தனியார் ஆம்னி பஸ்களைதான். இந்த ஆம்னி பஸ்களின் கட்டணம் சூழலுக்கு  ஏற்ப மாறுபடுவது உண்டு.

 மக்களின் அவசரத் தேவையை புரிந்துகொண்ட சில ஆம்னி பஸ் நிறுவனத்தினர்  கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி மக்களை திக்குமுக்காடச் செய்து வருகின்றனர்.  திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு சாதாரண நாள்களில் வசூலிக்கப்படும்  கட்டணத்தைவிட இப்போது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக  பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

 திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வழக்கமாக சாதாரண பஸ்களில் ரூ.450  முதல் 500, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.700 முதல் 800 கட்டணமாக வசூலிக்கப்படும்.

 ஆனால், கடந்த சில நாள்களாக சாதாரண பஸ்களில் ரூ.700 முதல் 800, குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களில் ரூ.800 முதல் 1,000 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதால் சில ஆம்னி பஸ் நிறுவனத்தினர் வழித்தட உரிமம் பெறாத பஸ்களையும் இயக்கியதாகக் கூறப்படுகிறது.

 திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு தினமும் 20-க்கும் மேற்பட்ட ஆம்னி  பஸ்கள் இயக்கப்படுகின்றன. முக்கியமான நான்கு நிறுவனங்களைச் சேர்ந்த பஸ்களில்  கூட்டம் எப்போதும் அதிகம் காணப்படும்.

 அரசு பஸ்களில் சென்னை செல்ல வேண்டுமானால் ஏறத்தாழ 12 மணி நேரம் பயண  நேரம் தேவைப்படும். ஆனால், 8 மணி நேரத்தில் சென்னைக்கு செல்லலாம் என்ற  அறிவிப்பால் ஆம்னி பஸ்களை நாடிச் செல்வோரின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

 இதைப் பயன்படுத்திக் கொண்டு தேவைக்கேற்றாற்போல கட்டணத்தையும் உயர்த்தும்  பழக்கத்தை ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சாதாரண  நாள்களில் வசூலிக்கும் கட்டணத்தைவிட விடுமுறைக் காலங்களில் கூடுதல் கட்டணம்  வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க யாரும் புகார்  செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாகவே உள்ளது.

 இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: "ஆம்னி  பஸ்களை பொறுத்தவரை தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய  மாநிலங்களில் உரிமம் பெற்ற பஸ்கள் ஏராளமாக தமிழகத்தில் இயக்கப்படுகின்றன.  இவ்வளவுதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று எந்த நிர்பந்தமும் அரசுத் தரப்பில்  ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை.

 30 பேர் இணைந்து ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து பயணம் செய்வதாகவே  ஆம்னி பஸ்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால், கூட்டம் அதிகம் உள்ள  காலங்களில் அவர்கள் தங்களுக்கு ஏற்றாற்போல அதிக கட்டணத்தை வசூலித்துக்  கொள்கின்றனர்.

 அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் ஏதும் வட்டாரப் போக்குவரத்து  அலுவலகங்களில் தெரிவிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பஸ் நிறுவனம் மீது நடவடிக்கை

எடுக்கப்படும்' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com