தூர்வாரப்படாத கால்வாய்கள்; துயரத்தில் விவசாயிகள்

திருநெல்வேலி, ஜூன் 23: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் போதிய அளவு தூர்வாரப்படாததால் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் விரயமாகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்
Updated on
2 min read

திருநெல்வேலி, ஜூன் 23: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கால்வாய்கள் போதிய அளவு தூர்வாரப்படாததால் பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் விரயமாகிறது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகள் உள்ளன. இந்த அணைகளில் இருந்து பாசனப் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.

மாவட்டத்தில் உள்ள 11 கால்வாய்களில் வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கன்னடியன், கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால்வாய் என மொத்தம் 7 கால்வாய்களில் இப்போது தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஏறத்தாழ 40,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். இவற்றில் பாளையங்கால்வாயை நம்பி மட்டும் ஏறத்தாழ 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கால்வாய்களில் தண்ணீர் வரத்து இருப்பதால் கார் சாகுபடிக்கான ஆரம்பகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், இந்த 7 கால்வாய்களில் இப்போது போதிய அளவு தன்னணீர் செல்கிறது. இதனால் விவசாயிகளுக்கு ஓரளவு மகிழ்ச்சி.

இருப்பினும், கால்வாய்களில் அமலைச்செடிகள் அதிக அளவில் காணப்படுவதால் தண்ணீர் செல்வதில் சிரமம் இருப்பதாகவும், பாசனத்துக்காக திறந்துவிடப்பட்ட தண்ணீர் விரயமாவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதேபோல, கால்வாய்களின் கரையோரங்களில் காணப்படும் வேலிகாத்தான் செடியையும், சீனிகொடி செடியையும் கோடைக்காலத்தில் அகற்ற பொதுப்பணித் துறை அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை என்பதும் விவசாயிகளின் குற்றச்சாட்டு.

இதற்கிடையே, பாளையங்கால்வாயில் கடந்த திங்கள்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை திடீரென நிறுத்தப்பட்டது. விவசாயிகளின் எதிர்ப்புக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. கால்வாயில் சூழ்ந்திருக்கும் அமலைச் செடிகளை அகற்ற இருப்பதால், பாளையங்கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோல, மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்களையும் மராமத்து செய்கிறோம் என்ற பெயரில் பொதுப்பணித் துறையினர் அரசு நிதியை செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

பொதுவாக, கார் சாகுபடிக்கு ஜூன் முதல் வாரத்தில் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம். பின்னர், மழைக்காலம் தொடங்கிவிடுவதால் சில நாள்கள் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் விவசாயிகள் ஆரம்பகட்டப் பணிகளைச் செய்வர்.

ஆனால், கோடைக்காலங்களில் கால்வாய்களைத் தூர்வாராமல், தண்ணீர் திறந்துவிடும் சமயத்தைப் பயன்படுத்தி மராமத்து செய்ய நினைப்பது அரசுப் பணத்தை விரயம் செய்வதோடு, விவசாயத்தைப் பாதிக்கும் செயலாகும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து மே மாதம் இறுதி வாரம்வரை கால்வாய்களில் எந்தவித தண்ணீர் போக்குவரத்தும் இல்லாமல் இருந்தது. இந்த சமயத்தில் தூர்வாரும் பணியிலும், மராமத்து பணியிலும் பொதுப்பணித் துறை அதிக கவனம் செலுத்தியிருந்தால் எந்தவித பிரச்னையும் ஏற்பட்டிருக்காது என்கின்றனர் விவசாயிகள்.

இதுகுறித்து தாமிரபரணி வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் காமராஜ் கூறியது:

"கால்வாய்களை தூர்வாருவதற்கு என தனியாக நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில் அமலைச்செடிகள் இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அந்த இடங்களில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com