தரகு நிறுவனங்களாக வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள்

திருநெல்வேலி,மார்ச் 2: வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரும் தரகு நிறுவனங்களாக பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் முறையான ஓட்டுநர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்
Updated on
2 min read

திருநெல்வேலி,மார்ச் 2: வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரும் தரகு நிறுவனங்களாக பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் முறையான ஓட்டுநர்கள் பயிற்சி பெற முடியாத நிலை உள்ளது.

இப் பள்ளிகளின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெறுவோரில் பலர், போதிய பயிற்சி, அனுபவம் இல்லாமல் வாகனங்களை ஓட்டும் போது சாலை விபத்துகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சாலை விபத்துக்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் தொடர்ந்து இரண்டாமிடத்தில் உள்ளது. நாட்டில் நடைபெறும் விபத்துகளில் நான்கில் ஒரு பகுதி மகாராஷ்டிரத்திலும், தமிழ்நாட்டிலும் நடைபெறுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது.

அதேபோல சாலை விபத்துகளில் 14 சதவிகிதம் தமிழகத்திலேயே நடைபெறுவதாகவும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. மாநிலத்தில் ஆண்டுக்கு சாலை விபத்து தொடர்பாக சுமார் 60 ஆயிரம் வழக்குகள் பதிவாகின்றன.

விபத்துக்கு சாலையும், வாகனமும் மட்டுமே காரணமாகிவிட முடியாது. வாகனத்தை ஓட்டுபவரும் விபத்தின் முக்கிய காரணமாக இருக்கிறார். ஆனால், இப்போது பலர் முறையான பயிற்சி பெற்று வாகனங்களை இயக்குவதில்லை. கனரக வாகனங்கள் போதிய அனுபவமில்லாத ஓட்டுநர்களாலேயே இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இக் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக, இந்த வாகனங்கள் அதிகளவில் விபத்துக்களில் சிக்குகின்றன. உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகின்றன.

பெரும்பாலான ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுவது இதற்கு பிரதான காரணமாகும். சில பயிற்சிப் பள்ளிகள் பணத்தை வசூல் செய்து, ஓட்டுநர் உரிமத்தை வாங்கிக் கொடுக்கும் தரகு நிறுவனங்களாகவே செயல்படுகின்றன. இதுபோன்ற பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெற்று வரும் நபரிடமிருந்து, பாதுகாப்பான பயணத்தை எதிர்பார்க்க முடியாத நிலை உள்ளது.

வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள், இப்படித்தான் இருக்க வேண்டும் என பல விதிமுறைகளை அரசு விதித்துள்ளது. ஆனால், அதை யாரும் கடைப்பிடிப்பதில்லை என்ற கருத்து பரவலாக உள்ளது.

இப் பள்ளிகளில் அலுவலகம், வகுப்பு அறை, ஆய்வு அறை, ஓய்வு அறை, சாலை விதிகள் குறித்த சமிக்ஞைகள் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும் என அரசின் விதிமுறைகள் கூறுகின்றன. ஆனால், இந்த கட்டமைப்புகளை கொண்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியை பார்ப்பது கடினம். பெரும்பாலான பயிற்சிப் பள்ளிகளில் அலுவலகத்திலேயே அனைத்து விஷயங்களும் அடங்கி விடுகின்றன.

வகுப்புக்கு அறைதான் இல்லை, வகுப்பாவது நடைபெறுகிறதா என்றால் அதுவும் கிடையாது. ஒருவர் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கு உரிமம் வாங்க, 20 மணி நேரம் பயிற்சி வகுப்பில் கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும் என விதிமுறை கூறுகிறது. ஆனால்,நடைமுறையில் அந்த அளவுக்கு பயிற்சி இருப்பதில்லை.

இதனால், சாலை விதிமுறைகள் பற்றி தெரியாமலேயே போய்விடுகிறது. இதன் பாதிப்பு சாலையில் விபத்தாக உருப்பெறுகிறது.

இன்று சொகுசு கார்களும், வெளிநாட்டு கார்களும் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் பழைய மாடல் காரை வைத்து ஓட்டுநர் பயிற்சியை அளிக்கும் பள்ளிகள் உள்ளன. இதன் காரணமாக ஒருவர், அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய காரை ஓட்ட முயலும்போது தடுமாற்றங்கள் ஏற்படுகிறது. இதுவும் சாலை விபத்துக்கு ஒரு காரணமாக இருக்கிறது.

இந்த நிலையை மாற்ற வாகன ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளை முறைப்படுத்த கடுமையான விதிமுறைகளை வகுக்க வேண்டும். விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றவா என்பதைக் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் ஓரளவுக்காவது விபத்துகளை குறைக்க முடியும். இல்லையெனில் விபத்துக்களும், இழப்புகளும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com