‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடரும் வேலைநிறுத்தம்: 2 ஆயிரம் பீடித் தொழிலாளர் குடும்பங்கள் பாதிப்பு

ஆலங்குளம், மார்ச் 3: ஆலங்குளத்தில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தனியார் பீடி நிறுனவத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், இத் தொழிலை நம்பி வாழும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன. ஆலங

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:56 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், மார்ச் 3: ஆலங்குளத்தில் கடந்த 11 நாள்களாக நடைபெற்று வரும் தனியார் பீடி நிறுனவத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், இத் தொழிலை நம்பி வாழும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளன.

ஆலங்குளம் பிரதான சாலையில் இயங்கி வரும் தனியார் பீடி நிறுவனத்தில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் கூலி உயர்வு, குறிப்பிட்ட அளவில் தரமான இலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 21-ம் தேதிமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாத நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சாலை மறியல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

அதில் உடன்பாடு ஏற்படாததால், அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனாலும் இப் பிரச்னையை உடனடியாகத் தீர்க்க பீடி நிறுவன நிர்வாகமோ, தொழிலாளர் நலத் துறையோ, மாவட்ட நிர்வாகமோ முழுமையாக கவனம் செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடரும் வேலைநிறுத்தத்தால், பீடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது. பல குடும்பங்கள் கந்துவட்டிக்கு பணம் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, ஒரு சாரார் வேலைநிறுத்தத்தைக் கைவிட்டுள்ளனர். இதனால் தொழிலாளர்களிடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளதுடன், வேலைநிறுத்தம் வலுவிழக்கும் நிலை உருவாகியுள்ளது.

தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் குறித்து தனியார் பீடி நிறுவன நிர்வாகத்தினர் கூறியதாவது: எங்கள் நிறுவன பீடி சுற்றும் தொழிலாளர்கள் தங்கள் குறைகள் குறித்து இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் தரவில்லை. புகாரும் செய்யவில்லை. அப்படியிருக்கையில் நாங்கள் இப் போராட்டம் பற்றி எப்படிப் பரிசீலிக்க முடியும்? மேலும் அவர்கள் கேட்கும் கூலி உயர்வு குறித்து எங்களுக்கு அரசாணை எதுவும் வரவில்லை. அப்படி வந்தால்தான் கூலி உயர்வு வழங்க முடியும். இப் பிரச்னையை தொழிலாளர்கள் அவர்களாகச் செய்யவில்லை. சில தொழிற்சங்கங்கள்தான் தூண்டிவிடுகின்றன என்றனர்.

தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள் கூறும்போது, பீடி இலை அளவு உயர்த்தித் தருதல் என்பது, குறிப்பிட்ட சில காலங்களில் இலையின் தரம் மிக மோசமாக இருந்தால் அந்த நேரத்தில் மட்டும் ஆயிரம் பீடிக்கு 700 கிராம் வழங்க வலியுறுத்தியுள்ளோம். மேலும் ஆயிரம் பீடிக்கு ரூ. 105.24 வழங்க வேண்டும் என்பது குறித்து, அரசாணை பீடி நிறுவனத்துக்கு வந்தால் மட்டுமே, கூடுதல் கூலியை அவர்கள் வழங்குவர் என்றனர்.

இதற்கிடையே இப் பிரச்னைக்கு தீர்வு கிடைத்துவிடாதா என தினமும் பீடி நிறுவன அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என பல்வேறு பகுதிகளுக்கும் பீடித் தொழிலாளர்கள் அலைந்துகொண்டிருக்கின்றனர்.

நிர்வாகம் சரியான பதிலைச் சொல்லாதது, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட மக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் எவரும் இதில் தலையிடாதது, அனைத்து தொழிற்சங்கங்களும் ஒத்துழைக்காதது குறித்து பீடித் தொழிலாளர்களிடையே ஆதங்கம் உள்ளது.

ஜனநாயக பீடித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. கணேசன் கூறியதாவது:

அனைத்துத் தொழிலாளர்களுக்காகவும்தான் போராடுகிறோம். ஆனால் குறிப்பிட்ட சில தொழிலாளர்கள் பீடிகளைக் கடைக்குக் கொண்டு செல்கின்றனர்.

பீடி நிறுவன ஒப்பந்தக்காரர்கள், ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பீடிகளை அதிகளவில் தயாரித்து, நிர்வாகத்தில் கொடுப்பதால் பீடி நிறுவனத்துக்கு எவ்விதத்திலும் நஷ்டம் இல்லை. ஆனால் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள்தான். போராட்டத்தின் தொடர்ச்சியாக சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.

பாதிக்கப்பட்ட பீடித்தொழிலாளர்கள் கூறியதாவது:

சிறு சேமிப்பு, சீட்டுகள், பண்ட், சிறுசிறு கடன்களை அடைப்பது என முழுக்க பீடித் தொழிலை மட்டுமே இப் பகுதி மக்கள் நம்பி வாழ்கின்றனர். வேலைநிறுத்தத்தால் நிறுவனத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறதோ இல்லையோ, தொழிலாளர் குடும்பங்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளன.

பீடி நிறுவனமும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் சிலரும், பீடி கடைக்குச் செல்லுமாறு பெண்களிடம் வலியுறுத்துகின்றனர். அதில் மனமாற்றம் அடைவோரே போராட்டத்தைக் கைவிட்டு பீடி கடைக்குச் செல்கின்றனர். இதனால் போராட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டதுபோன்ற மாயை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் பிரச்னைக்கு வெள்ளி அல்லது சனிக்கிழமை காலைக்குள் முடிவு தெரியவில்லை என்றால் சனிக்கிழமை மாலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்கப் போகிறோம். பேரவைத் தேர்தலையும் புறக்கணிக்கப்போகிறோம் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.