மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய குற்றால சீசன்!

தென்காசி, செப். 27: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனில் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். முழு அளவில் இருந்த சீசன், சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, வியாபாரிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த
Updated on
2 min read

தென்காசி, செப். 27: குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசனில் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். முழு அளவில் இருந்த சீசன், சுற்றுலா பயணிகள் மட்டுமன்றி, வியாபாரிகளையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

தென்னகத்தின் "ஸ்பா' என்றழைக்கப்படும் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை சீசன் நிலவும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூலிகைகளுடன் கலந்துறவாடி பேரருவியில் கொட்டும் தண்ணீரில் ஆனந்த குளியல் போடுவதற்கு தமிழகம் மட்டுமன்றி பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.

சீசன் மூன்று மாத காலம் என்றாலும், ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 15 வரை மட்டுமே சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். கடந்த நான்கு ஆண்டுகளில் முறையே 16 லட்சம், 18 லட்சம், 20 லட்சம், 23 லட்சம் பேர் வருகை தந்துள்ள நிலையில், நிகழாண்டில் இதுவரை 30 லட்சம் பேர் வந்துள்ளதாக அரசுத் தரப்பில் அதிகாரிகள் தெரிவித்தனர். இப்போதும் தினமும் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளுக்கு வந்து செல்கின்றனர். விடுமுறை தினங்களில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும்.

குற்றாலத்தில் நிகழாண்டில்தான் அனைத்து அருவிகளிலும் செழிப்பாக தண்ணீர் விழுந்துள்ளது. இப்போது செப்டம்பர் இறுதி ஆகியும்கூட பேரருவி, ஐந்தருவி, சிற்றருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது.

சீசனுக்காக சந்நிதி பஜாரில் தாற்காலிகமாக கடை அமைக்கும் வியாபாரிகள், ஆகஸ்ட் இறுதியில் கடைகளைக் காலிசெய்துவிடுவர். ஆனால், இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்வதால், தாற்காலிக கடைகளும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

இன்னும் என்ன தேவை? குற்றாலத்தில் 3 மாத காலமே சீசன் நீடிக்கிறது. அதைத் தவிர, அவ்வப்போது பெய்யும் மழை, சாரல் காரணமாக தாற்காலிகமாக சில நாள்களுக்கு மட்டுமே அருவிக் குளியலுக்கு வாய்ப்பு இருக்கிறது.

சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள், வாகனசேவை, சிறு வணிகர்களுக்கு சீசன் காலங்களில் மட்டுமே வருவாய் கிடைக்கும். எனவே பிற நகரங்களில் உள்ளதுபோல் "தீம் பார்க்குகளை' உருவாக்கவும், கேரள மாநில சுற்றுலா தலங்களில் இருப்பதுபோல் சித்த, ஆயுர்வேத மையங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கலாம்.

சீசன் இல்லாத காலங்களிலும், விடுமுறை நாள்களிலும் மலையேற்றப் பயிற்சி முகாம்களை நடத்தலாம்.

இந்த நாள்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தங்குமிடம், போக்குவரத்து போன்றவற்றில் சிறப்பு சலுகைகள் வழங்குவதன் மூலம் அதிகமானோர் இங்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

படகு குழாமில் தேவையான அளவு தண்ணீரைத் தேக்கி ஆண்டு முழுவதும் படகு சவாரி செய்யவும், மீன் காட்சியகத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப் பகுதியிலுள்ள அணைகள் மற்றும் பிற சுற்றுலா தலங்களை கண்டுகளிக்கும்விதமாக "சர்குலர் டூரை' அரசு ஏற்படுத்தலாம்.

சுற்றுலா வளர்ச்சியில் தனியார் முதலீடுகளை ஊக்கப்படுத்த வேண்டும், தென்காசிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள், பஸ் வசதிகள் இதுதவிர சாத்தியமான சுற்றுலா திட்டங்களை ஆலோசித்து குற்றாலத்தை முழுமையான சுற்றுலா தலமாக மாற்ற முழு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com