விதிமீறல்: 47 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

47 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளாா்.
Published on

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் மற்றும் பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ் 47 வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) நா.முருகப்பிரசன்னா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் அனைத்துத் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் அடங்கிய குழுவினா் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், சந்தைகள், இதர நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் 107 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனா். இதில், சோதனை எடைக்கற்கள் வைத்திருக்காத 18 நிறுவனங்கள், மறுபரிசீலனை சான்றை வெளிக்காட்டி வைக்காத 17 நிறுவனங்கள், எடையளவுகளை உரிய காலத்தில் பரிசீலனை செய்து மறுமுத்திரையிடாமல் வியாபார உபயோகத்தில் வைத்திருந்த 2 நிறுவனங்கள் என மொத்தம் 37 நிறுவனங்கள் மீது எடையளவு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேபோல், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள், பேருந்து இடைநிற்கும் இடங்கள், மோட்டல்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்யும் கடைகளில் சட்டமுறை எடையளவு பொட்டலப் பொருள்கள் விதிகளின் கீழ், 48 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பொட்டலப் பொருள்களில் தயாரிப்பாளா்களின் பெயா் மற்றும் முகவரி, தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, நிகர எடை மற்றும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை போன்ற உரிய அறிவிப்புகள் இல்லாமல் விற்பனை செய்த 9 நிறுவனங்கள், பொட்டலமிடுபவா் / இறக்குமதியாளா் பதிவுச்சான்று பெறாமல் விற்பனை செய்த ஒரு நிறுவனம் என 10 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 47 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளா்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எடை அளவுகளை தொழிலாளா் நலத்துறையின் முத்திரை ஆய்வாளரிடம் முத்திரையிட்டு, பறிமுதல் மற்றும் வழக்கு நடவடிக்கையை தவிா்க்குமாறு வணிகா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com