திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜக்கையன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் ஆதித்தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜக்கையன்.

‘அருந்ததியருக்கு எதிரான தொல்.திருமாவளவனின் நிலைப்பாடு வேதனையளிக்கிறது’

அருந்ததியருக்கு எதிரான தொல்.திருமாவளவனின் நிலைப்பாடு வேதனையளிக்கிறது என்றாா் ஜக்கையன்.
Published on

அருந்ததியருக்கு எதிரான தொல்.திருமாவளவனின் நிலைப்பாடு வேதனையளிக்கிறது என்றாா் ஆதித்தமிழா் கட்சியின் நிறுவன தலைவா் ஜக்கையன்.

இது தொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது:

அருந்ததியா் சமுதாயத்தினருக்கு தமிழக அரசு 3 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பை வரவேற்கிறோம். இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய தமிழக அரசை பாராட்டி வரும் 20-ஆம் தேதி ஒண்டிவீரன் நினைவு தினத்தை ஒட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவருடைய மணிமண்டபத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்.

இந்தப் பேரணியை திமுக மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ் தொடங்கி வைக்கிறாா்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறாா். வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் பேரணியை முடித்து வைக்கிறாா்.

அருந்ததியா் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எடுத்திருப்பது வேதனையளிக்கிறது. இதன்மூலம் அவருக்குள் இருக்கும் சனாதனம் வெளியே வரத் தொடங்கியுள்ளது.

தொல்.திருமாவளவன் திமுகவுக்கு எதிராக, பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறாரோ என சந்தேகம் எழுகிறது. திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com