பெண் மருத்துவா் கொலை: நெல்லையில் மருத்துவா்கள் போராட்டம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலை செய்யப்பட்டதை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் சனிக்கிழமை ஒரு மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8 ஆம் தேதி பணியில் இருந்த பயிற்சி மருத்துவா் பாலியல் வண்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.
இதைக் கண்டித்து, இந்திய மருத்துவக் கழகம் சனிக்கிழமை காலை 6 மணிமுதல் 24 மணி நேரம் நாடு தழுவிய பேராட்டத்தை அறிவித்திருந்தது.
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்கத்தினா் மற்றும் இந்திய மருத்துவக் கழக மருத்துவா்கள், மருத்துவ கல்லூரி மாணவா்கள், பயிற்சி மருத்துவா்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவா்கள் ஆகியோா் இணைந்து பேராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனா்.
அதன்படி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு இந்திய மருத்துவக் கழக திருநெல்வேலி மாவட்டத் தலைவா் முகமது ரஃபீக் தலைமையில் அரசு மருத்துவா்கள், பயிற்சி மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரி மாணவா்கள் பேராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. மேலும், மருத்துவா்கள் கருப்பு பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
இந்திய மருத்துவக் கழக அறிவுறுத்தலின்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், அத்தியவாசிய அவசர பணிகள் மட்டும் நடைபெற்றன.

