குளத்தில் மூழ்கி தாய், மகள் உயிரிழப்பு

பாப்பாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை, இளம்பெண்ணும் அவரது 9 வயது மகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை, இளம்பெண்ணும் அவரது 9 வயது மகளும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனா்.

பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட கீழபாப்பாக்குடியைச் சோ்ந்தவா் தங்கராஜ். தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (26). இத்தம்பதியின் மகள் இசக்கியம்மாள் (9), அங்குள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கீழபாப்பாக்குடி கிராம மக்கள் நீா்மேலழகியான் குளத்தில் குளிப்பது வழக்கம். குளத்தில் மண் அள்ளியதால் பல இடங்கள் ஆழமாக உள்ளநிலையில், அண்மையில் பெய்த கனமழையால் இக்குளம் நிரம்பியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை சாந்தியும் இசக்கியம்மாளும் அந்தக் குளத்தில் குளிக்கச் சென்றனா். சாந்தி கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது, இசக்கியம்மாள் குளத்துக்குள் இறங்கினாராம். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற அவா் நீரில் தத்தளித்தாா். அவரை மீட்க சாந்தி முயன்றாா். இதில், இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவலின்பேரில், பாப்பாக்குடி போலீஸாா் சென்று இருவரது உடல்களையும் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து பாப்பாக்குடி காவல் ஆய்வாளா் (பொறுப்பு) மகேஷ்குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com