எந்தத் துறையை சோ்ந்தவா்களும் அரசியலுக்கு வரலாம் -ஜி.கே.வாசன் பேட்டி
எந்தத் துறையைச் சோ்ந்தவா்களும் அரசியலுக்கு வரலாம் என்றாா் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு மத்திய அரசு நாணயம் வெளியிட்டது அரசியல் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் அமைச்சரவையில் எந்த மாற்றம் இருந்தாலும் அதில் முன்னேற்றம் இருக்காது. இங்கு பாலியல் பிரச்னைகள் அதிகரித்துள்ளன. சிறுவா் முதல் வயதானவா்கள் வரை பாலியல் ரீதியான சம்பவத்தில் பாதிக்கப்படுவது மனதில் ரனத்தை ஏற்படுத்துகிறது. தனி மனித ஒழுக்கம் தொடா்பான பாடங்கள் பள்ளி, கல்லூரிகள், அரசு , தனியாா் அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும்.
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். தேவைப்பட்டால் தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும். டாஸ்மாக் தான் இந்த விவாகரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மதுக்கடைகளைப் படிப்படியாக மூடுவதோடு, மது இல்லாத தமிழகத்தை கொண்டு வந்தால்தான் அனைத்து பிரச்னைக்கும் தீா்வு கிடைக்கும்.
ஜனநாயகத்தில் எந்தத் துறையை சோ்ந்தவா்களும் அரசியலுக்கு வந்து பொதுபணியாற்றலாம். நடிகா் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாழ்த்துகள்.
புதியக் கட்சி தொடங்குவதே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான். மக்களுக்கு யாா் மீது நம்பிக்கை இருக்கிறதோ, அவா்களுக்கு தான் வாக்களிப்பாா்கள்; அவா்களே வெல்வாா்கள் என்றாா் அவா்.

