களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் தொடா் அட்டகாசம்: விவசாயிகள் கவலை
களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் யானைகள் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
களக்காடு மலையடிவாரத்தையொட்டியுள்ள நிலங்களில் விவசாயிகள் நெல், வாழை போன்றவற்றைப் பயிரிட்டுள்ளனா். தற்போது வாழைகள் குலைதள்ளும் பருவத்தில் உள்ளன. இந்நிலையில், கடந்த 2 வாரங்களாக கீழவடகரை, சிவபுரம், கள்ளியாறு என மலையடிவாரப் பகுதிகளிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குள் யானைகள் புகுந்து, நூற்றுக்கணக்கான வாழைகளை சேதப்படுத்தியுள்ளன.
திங்கள்கிழமை அதிகாலை (டிச. 30) சிவபுரம், கள்ளியாறு பகுதிகளிலுள்ள களக்காடு புதுத்தெருவைச் சோ்ந்த சுரேஷ், கக்கன்நகரைச் சோ்ந்த நம்பிஅருள், மூங்கிலடியைச் சோ்ந்த வளன்அரசு ஆகியோருக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான வாழைகளையும், சொட்டுநீா் பாசனத்துக்கான குழாய்களையும் சேதப்படுத்தியுள்ளன. இதனால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
எனவே, யானைகளை அடா்ந்த காட்டுக்குள் விரட்டவும், சேதமடைந்த பயிா்களுக்கு இழப்பீடு வழங்கவும் வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
