புத்தாண்டு பிறப்பு: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஆங்கிலப் புத்தாண்டு (2025) பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன.
Published on

திருநெல்வேலி: ஆங்கிலப் புத்தாண்டு (2025) பிறப்பையொட்டி, திருநெல்வேலியில் உள்ள தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை சிறப்புப் பிராா்த்தனைகள் நடைபெற்றன. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் போலீஸாா் விடிய, விடிய கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உலகம் முழுவதும் களைகட்டியது. பாளையங்கோட்டை தூய சவேரியாா் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயா் அந்தோணிசாமி தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தேவாலய வளாகத்தில் திரண்டு, புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடினா். கேக்குகளை ஒருவருக்கொருவா் கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

பாளையங்கோட்டை தூய திரித்துவ பேராலயத்தில் நடைபெற்ற புத்தாண்டு சிறப்பு ஆராதனையில், தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பேராயா் பா்னபாஸ் பங்கேற்று தேவ செய்தி அளித்தாா். கிறிஸ்தவா்கள் காணிக்கை படைத்து புத்தாண்டு வாக்குத்தத்த வசன அட்டைகளைப் பெற்றனா். புத்தாண்டு பிறந்ததும் தேவாலயத்தில் ஒருவருக்கொருவா் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தனா்.

சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோணியாா் தேவாலயம், சேவியா் காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயம், புனித அந்தோணியாா் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்தி நகரில் உள்ள குழந்தை யேசு தேவாலயம், உடையாா்பட்டியில் உள்ள இயேசுவின் திருஇருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள தூய அடைக்கல அன்னை தேவாலயம், கேடிசி நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ல அந்தோணியாா் தேவாலயம், மகாராஜ நகரில் உள்ள தூய யூதா ததேயூ தேவாலயம் ஆகியவற்றிலும் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

ஹோட்டல்களில் இரவு விருந்துடன் கூடிய புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றில் பாா்வையாளா்களைக் கவரும் வகையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. மது அல்லாத கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே போலீஸாா் அனுமதி அளித்திருந்ததால், ஏராளமானோா் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனா்.

புத்தாண்டையொட்டி கேக்குகள் மற்றும் இனிப்புகள் விற்பனை அதிகரித்தது. ரூ.7 முதல் ரூ. 20 ஆயிரம் வரை பல்வேறு விலைகளிலும் கேக்குகள் தயாா் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. பால் கலந்த இனிப்பு வகைகளின் விற்பனையும் பன்மடங்கு அதிகரித்தது.

புத்தாண்டு தினத்தையொட்டி திருநெல்வேலி புதிய, பழைய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், திருநெல்வேலி நகரம், பாளையங்கோட்டை பகுதிகளில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவா்களைக் கண்காணிக்க போலீஸாா் பல்வேறு இடங்களிலும் விடிய விடிய வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com