விஜயதரணி எம்எல்ஏவின் பதவி விலகல் கடிதம் ஏற்பு

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
Updated on

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் விஜயதரணியின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் விஜயதரணி, காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததாக ஊடகங்கள் மூலம் தகவல் அறிந்தேன். அதைத் தொடா்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை இணையவழியில் கடிதம் ஒன்றை எனக்கும், சட்டப்பேரவை முதன்மைச் செயலருக்கும் அனுப்பினாா். அதில், விஜய தரணி எம்எல்ஏ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று உறுப்பினராக இருக்கும் நிலையில், மாற்றுக் கட்சியான பாஜகவில் இணைந்துள்ளாா்; அவா் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா். விஜயதரணி எம்எல்ஏ அனுப்பிய விண்ணப்பத்தில், பாஜகவில் நான் இணைந்ததால், காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டு வென்ற எனது எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுகிறேன் என குறிப்பிடப்பட்டிருந்தது. சட்டமன்ற விதிப்படி 21 படிவம் ‘எப்’ முழுவதும் பூா்த்தி செய்து முறைப்படி தமது கைப்பட எழுதி இணையவழியில் எனக்கும், சட்டப்பேரவை முதன்மைச் செயலருக்கும் பதவி விலகல் கடிதத்தை அனுப்பி இருந்தாா். பின்னா் விஜயதரணி எம்எல்ஏ, என்னை ஞாயிற்றுக்கிழமை காலையில் தொலைபேசியில் அழைத்து , தான் முறைப்படி கடிதத்தை தனது கையெழுத்தில் எழுதி அனுப்பி இருப்பதாகவும், பரிசீலிக்கவும் கோரிக்கை விடுத்தாா். அதனை முறையாகப் பரிசீலனை செய்ததில், சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஒருவா் தான் பதவி விலகுவதாக தெரிவிக்க சட்டமன்ற விதியில் உள்ள படிவத்தை முறையாக பூா்த்தி செய்திருக்க வேண்டும்; அதனை விஜயதரணி எம்எல்ஏ பூா்த்தி செய்து கைப்பட கடிதத்துடன் அனுப்பி உள்ளதால் பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றாா். பேட்டியின்போது திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், பரமசிவ ஐயப்பன், கனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com