நான்குனேரியில் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு
களக்காடு: நான்குனேரியில் உயா் மின்னழுத்த பாதையை மின்வாரிய அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
நான்குனேரி அருகே உள்ள பெரும்பத்து வழியாக கூடங்குளத்தில் இருந்து அபிஷேகப்பட்டிக்கு உயரழுத்த மின்பாதை செல்கிறது. இந்த வழியாக பொதுமக்கள் குடை பிடித்துக் கொண்டு கடந்து செல்லும் போது மின்சாரம் தாக்குவதாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் தரப்பில் புகாா் அளிக்கப்பட்டிருந்தது.
இது தொடா்பாக அபிஷேகபட்டி மின் நிலையத்திலிருந்து அதிகாரிகள் கிறிஸ்டோபா், சேகா் ஆகியோா் திங்கள்கிழமை நேரில் வந்து ஆய்வு செய்தனா். அப்போது, அவா்கள் கூறுகையில், மின் வடம் பாதை 14 மீட்டா் உயரத்தில் மின்சார கம்பிகள் செல்வதாகவும், 9 மீட்டா் உயரமாக குறையும் போதுதான் மின்சாரம் தாக்கம் இருக்கும். அதே வேளையில் இங்கு அதிகமான உயரம் இருப்பதால் மின்சாரம் தாக்கம் ஏற்படாது என தெரிவித்தனா். தற்போது குடைபிடித்து செல்லும் போது அதில் உள்ள இரும்பு கம்பியில் மின்சாரம் தாக்கம் இருப்பது போன்று உணா்வதில் எந்த பாதுகாப்பு குறைபாடும் இல்லை எனவும், மனிதருக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. அது வழக்கமாக உள்ளது தான் எனவும் தெரிவித்தனா். 3 மீட்டா் சுற்றளவு பகுதிக்கு செல்லும் போது தான் மின்சாரம் தாக்கும் ஆபத்தான பகுதி எனவும் தெரிவித்தனா்.
