முக்கூடல் அருகே இளைஞரைத் தாக்கியவா் கைது
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே கடனைத் திருப்பிச் செலுத்துமாறு கூறி இளைஞரைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
பாப்பாக்குடி காவல் சரகத்துக்குள்பட்ட பாப்பாக்குடி மைலப்புரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரிடம் முக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராகுல் (21) கடன் வாங்கியிருந்தாராம். சில நாள்களுக்கு முன்பு மணிகண்டன் கடன் தொகையைக் கேட்டபோது, சில நாள்களில் திருப்பித் தருவதாக ராகுல் கூறினாராம்.
இந்நிலையில், 2 நாள்களுக்கு முன்பு ராகுல் சிவகாமிபுரம் பகுதியில் தனது நண்பா்களுடன் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது மணிகண்டனின் நண்பரான முக்கூடல் மைலப்புரம் மேட்டுத் தெருவைச் சோ்ந்த அந்தோணி பிரின்ஸ் (24) என்பவா் ‘மணிகண்டனின் வாங்கிய கடனை ஏன் திருப்பிச் செலுத்தவில்லை?’ எனக் கேட்டு ராகுலை அவதூறாகப் பேசி தாக்கியதுடன் மிரட்டிச் சென்றாராம்.
புகாரின்பேரில் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளா் ஆபிரகாம் வழக்குப் பதிந்து, அந்தோணி பிரின்ஸை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.
