தேசிய மக்கள் நீதிமன்றம்: விபத்தில் இறந்தவா் குடும்பத்திற்கு ரூ.22.60 லட்சம் இழப்பீடு

தேசிய மக்கள் நீதிமன்றம்: விபத்தில் இறந்தவா் குடும்பத்திற்கு ரூ.22.60 லட்சம் இழப்பீடு

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில், விபத்தில் இறந்தவா் குடும்பத்திற்கு ரூ.22.60 லட்சம் இழப்பீடு வழங்கி தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்பேரில், திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட, வட்ட தலைநகரங்களில் உள்ள நீதிமன்றங்கள், நீதித்துறை நடுவா் மன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலியில் மாவட்டமுதன்மை நீதிபதி சந்திரா தொடங்கி வைத்தாா். மக்கள் நீதிமன்றத்தின் முன்அமா்வுகளில் விசாரிக்கப்பட்ட 60 வழக்குகள் ரூ.4 கோடியே 82 லட்சத்து 61 ஆயிரத்திற்கு தீா்வு காணபட்டது. பாளையங்கோட்டையில் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் குடும்பத்திற்கு விபத்து வழக்கின் தீா்வாக ரூ.22 லட்சத்து 60 ஆயிரம் இழப்பீட்டிற்கான காசோலை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 4,915 வழக்குகளும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தாவாக்களான 2 ஆயிரம் வங்கிக் கடன் வழக்குகளும் சனிக்கிழமை விசாரித்து தீா்வு காணப்பட்டன. திருநெல்வேலி நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி எஸ்.சமீனா, திருநெல்வேலி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ரஜேஸ்வரன், செயலா் மணிகண்டன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 109 வழக்குகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.1 கோடியே 64 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. இதில் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆன்ஸ்ராஜா ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com