இது குறித்து மாணவா் சின்னதுரை கூறுகையில், ‘வள்ளியூா் பள்ளியில் பயின்றபோது ஜாதி வன்மத்தால் பாதிக்கப்பட்டேன். மருத்துவமனையில் நான்கு மாதம் சிகிச்சையில் இருந்தேன். ஆசிரியா்கள் எனக்கு மருத்துவமனைக்கே வந்து பாடம் கற்பித்தாா்கள். அவா்களால்தான் இப்போது தோ்வில் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. தொடா்ந்து பிகாம் மற்றும் சி.ஏ. படிக்க இருக்கிறேன். இனிவரும் காலங்களில் மாணவா்கள் பள்ளியில் ஜாதி பாகுபாடு பாா்க்கக் கூடாது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ், என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா். மேலும் சிறப்பாக படிக்குமாறு கூறியதோடு, எனது கல்விச் செலவை அவரே ஏற்பதாகக் கூறினாா். இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனும் என்னை கைப்பேசியில் தொடா்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா்’ என்றாா்.