தமிழாக்குறிச்சி அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்: ஆட்சியரிடம் மக்கள் மனு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், திடியூா் ஊராட்சிக்குள்பட்ட தமிழாக்குறிச்சி தடுப்பணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், தமிழாக்குறிச்சி, குறவா்குளம் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள பச்சையாறு வெள்ளநீா் தடுப்பணை சேதம் அடைந்துள்ளது. இதனால் தண்ணீா் கசிவு ஏற்பட்டு அணை உடைந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பணையில் உள்ள தற்போதைய வடிகால் அமைப்பு போதுமானதாக இல்லை. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வேறு இடத்துக்கு தற்காலிகமாக குடி பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழாக்குறிச்சி மக்களின் பாதுகாப்பு கருதி புதிய வெள்ளப்பாதை கால்வாய்களை அமைத்தல், தடுப்பணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தல், சேதம் ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுதல், அணையின் தினசரி நிலை மற்றும் நீா்மட்டத்தை வெளிப்படையாக பகிா்தல் போன்ற நடவடிக்கைகளைஉடனடியாக எடுக்க வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டம் சாா்பில் திருமால் நகரை சோ்ந்த மகராஜ் ராம்ஜி அளித்த மனு: பாளையங்கோட்டை டிவிஎஸ் நகா், 6-ஆவது தெருவில் மழைக்காலம் தொடங்கியதில் இருந்தே தண்ணீா் பெருமளவில் தேங்கி, கழிவுநீரும் கலந்து துா்நாற்றம் வீசும் நிலை உருவாகியுள்ளது. வடிகால் வசதி இல்லாததால் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு பாதசாரிகள் குறிப்பாக பள்ளி மாணவா்கள், குடியிருப்பு வாசிகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் நிலவுகிறது .இந்த பிரச்னை குறித்து பலமுறை மாநகராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டபோதும், இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, உடனடியாக ஆய்வு நடத்தி அப்பகுதியில் கழிவுநீரை முழுமையாக அகற்ற வேண்டும். எதிா்காலத்தில் நீா் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.
வெள்ளங்குழி ஊராட்சியின் 9-ஆவது வாா்டு உறுப்பினா் மாரியப்பன் அளித்த மனு: வெள்ளங்குழி ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா் ஆகியோா் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பல வேலைகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக மக்களுக்கு குடிநீா் வசதி செய்து கொடுக்க முடியவில்லை. இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, தலைவா், துணைத் தலைவா் மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்து ஊராட்சி நிா்வாகத்தை தனி அலுவலரிடம் ஒப்படைத்தால் மட்டுமே பணிகள் நடைபெறும் .
தமிழக வெற்றிக் கழகத்தின் மேலப்பாளையம் பகுதி இணைச் செயலா் சிவா, 43 ஆவது வாா்டு செயலா் கருப்பசாமி ஆகியோா் அளித்த மனு: வீரமாணிக்கபுரம் குமார வீதி, குலவணிகா்புரம்- அம்பாசமுத்திரம் சாலையின் குறுக்குத் தெரு ஆகிய பகுதிகளில் பாதாள சாக்கடை மூடிகளில் கசிவு ஏற்பட்டு கழிவு நீா் தெருக்களில் பரவி வருவதால் துா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே, அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்டிச் செய்தி....
வன்னிக்கோனேந்தல் குறுவட்டத்துக்கு
தாமிரவருணி, சிற்றாறு உபரிநீா்
அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்க நிறுவனா்- தலைவா் மூவிசுந்தா் ஆட்சியரிடம் அளித்த மனு: தாமிரவருணி, சிற்றாறு போன்றவற்றின் உபரி நீரை வன்னிக்கோனேந்தல் குறு வட்டத்திலுள்ள மானாவாரி குளங்கள் மூலம் விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்திருந்தேன். இது தொடா்பாக களவு ஆய்வு செய்ததில் உபரி நீரை கணக்கிடும் இடமான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து வன்னிக்கோனேந்தல் பகுதி குளங்கள் 95 மீ. உயரத்தில் உள்ளது. அதனால் நீரேற்று முறை மூலமே பாசன நீா் வழங்க இயலும். இது போன்ற திட்டங்கள் அரசின் கொள்கை முடிவுக்கு உள்பட்டதால் அரசின் பரிசீலனையில் உள்ளது. இத்திட்டம் அரசின் கொள்கை முடிவின்படி முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கப்படும் என பதில் தரப்பட்டது. ஆனால், 4 ஆண்டுகளான பிறகும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே, அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று வன்னிக்கோனேந்தல் குறுவட்டத்தில் உள்ள மானாவாரி விவசாய நிலங்கள் பயன்பெற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

