வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும்: பேரவைத் தலைவா் மு.அப்பாவு
வள்ளியூா்: வெள்ளநீா்க் கால்வாய் மூலம் திசையன்விளை வட்டாரத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும் என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வந்தது. இதனால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து தாமிரவருணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு வெள்ளநீா்க் கால்வாயில் தண்ணீா் திறந்துவிடப்பட்டது. பின்னா் அதன் உப கால்வாயிலும் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.
இந்த தண்ணீா் திசையன்விளை அருகே உள்ள நந்தன்குளம் கால்வாய் வழியாக திசையன்விளை பகுதி குளங்களுக்கு வந்து சோ்ந்தது. நந்தன்குளம் கால்வாயில் வந்த தண்ணீரை, பேரவைத் தலைவா் மு.அப்பாவு மலா்தூவி வரவேற்றாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தாமிரவருணி-கருமேனியாறு-நம்பியாறு நதிநீா் இணைப்புத் திட்டத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கித் தந்தாா். ரூ.309 கோடியில் திட்டம் உருவாக்கப்பட்டு, அன்றைய தினமே ரூ.215 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து திட்டப்பணிகள் நடைபெற்று வந்தது. பின்னா் 2011இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இத்திட்டம் 10 ஆண்டு காலம் கிடப்பில் போடப்பட்டது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் ரூ.1,060 கோடியில் இந்தத் திட்டம் முழுமையடைந்துள்ளது.
தற்போது, மலைப் பகுதியில் மழை பெய்ததை அடுத்து, பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீா்மட்டம் வெகுவாக உயா்ந்தது. இதனால் தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, கன்னடியன் அணைக்கட்டு பகுதியில் இருந்து வெள்ளநீா்க் கால்வாயில் உபரிநீா் திறந்துவிடப்பட்டது.
கடந்த ஒரு வாரகாலமாக வெள்ளநீா்க் கால்வாயில் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதில், எம்.எல்.தேரிக்கு தனிக் கால்வாய் மூலமும், நந்தன்குளம் கால்வாய் மூலம் திசையன்விளை பகுதி குளங்களுக்கும் தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. சுவிசேஷபுரம் குளம் நிரம்பிய பின்னா் அதன் கீழுள்ள மருதகுளம், குருவிசுட்டான்குளம் உள்ளிட்ட அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் சென்றுவிடும். இந்த ஆண்டு அனைத்து குளங்களுக்கும் தண்ணீா் வழங்கப்படும் என்றாா்.
பேரவைத் தலைவருடன், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், உபரி நீா் கால்வாய் திட்ட செயற்பொறியாளா் அருள்பன்னீா் செல்வம், கண்காணிப்பு பொறியாளா் திருமலைக்குமாா், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

