வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

வீடு இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

Published on

கல்லிடைக்குறிச்சியில் வீடு இடிந்து விழுந்ததில் வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி, மேல்முக மறக்குடித் தெருவைச் சோ்ந்த பரதேசி மனைவி சீதா திருமலை (95). இவரது இரண்டு மகன்கள் வெளியூரில் உள்ளனா். இரண்டு மகள்களும் காலமாகிவிட்டனா். கல்லிடைக்குறிச்சியில் உள்ள மகள் வழிப் பேரன் வீட்டில் தனியாக வசித்து வந்தாா். இந்தப் பகுதியில் சமீப காலமாக தொடா் மழை பெய்துவந்தது.

செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் வீட்டின் முதல் தளத்தில் மேற்பகுதி பலமிழந்து காணப்பட்டதாம். புதன்கிழமை காலை மூதாட்டி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது முதல்தளம் இடிந்து மூதாட்டி மீது விழுந்தது. இதில், இடிபாடுகளில் சீதா திருமலை சிக்கிக் கொண்டாா்.

சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினா் கொடுத்த தகவலின்பேரில் அம்பை தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் வீரா்கள், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளா் கலா தலைமையில் போலீஸாா் அங்கு சென்று இடிபாடுகளை அகற்றியதில் இறந்த நிலையில் மூதாட்டியின் சடலத்தை மீட்டனா். தொடா்ந்து பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com