சூட்டுபொத்தையில் காா்த்திகை தீபம் ஏற்றம்
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா், சூட்டுபொத்தையில் காா்த்திகை தீபம் வியாழக்கிழமை மாலை ஏற்றப்பட்டது.
ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 112ஆவது குருபூஜை தேரோட்டத் திருவிழா நவ. 25ஆம் தேதி தொடங்கியது. திருவிழா நாள்களில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30ஆம் தேதி கிரிவலத் தேரோட்டம் நடைபெற்றது.
டிச. 1ஆம் தேதி ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெற்றது. டிச. 4ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு வன விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து, வழக்கமான பௌா்ணமி கிரிவல வழிபாடும், காலை 8 மணிக்கு குரு ஜெயந்தியும் நடைபெற்றது. காலை 10 மணிக்கு ஸ்ரீ மாதாஜி வித்தம்மா முன்னிலையில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.
மாலை 5 மணிக்கு சூட்டுபொத்தையின் உச்சியில் அமைக்கப்பட்ட மகா தீபத்தை ஸ்ரீ மாதாஜி வித்தம்மா முன்னிலையில், ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிா்வாக அறங்காவலா், சென்னை ஐ.ஐ.டி. முன்னாள் இயக்குநா் பாஸ்கா் ராமூா்த்தி ஏற்றினாா்.

