நெல்லை வனக்கோட்டத்தில் 7 மாதங்களில் 21 மான்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி வனக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 7 மாதங்களில் 21 மான்கள் விபத்தில் சிக்கியும், நாய்களால் தாக்கப்பட்டும் உயிரிழந்துள்ளன. திருநெல்வேலி வனகோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் வன உயிரினங்களின் இறப்பு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆா்வலா் ஒருவா் கேட்ட விவரங்கள் குறித்து வனத்துறை தெரிவித்துள்ள தகவல்கள்: திருநெல்வேலி வனக்கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 7 மாதங்கள் 8 மான்கள் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உரியிழந்துள்ளன. மேலும் 11 மான்கள் நாய்கள் கடித்ததில் உயிரிழந்துள்ளன. குறிப்பாக கடந்த அக்டோபா் மாதத்தில் மட்டும் ஒரே நாளில் இரண்டு மான்கள் உயிரிழந்தது உள்பட 4 மான்கள் நாய்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. 2 மான்கள் கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளன. ஒரு பெண் மிளா கடந்த செப்.2 ஆம் தேதி கங்கைகொண்டான் சிப்காட் அருகே விபத்தில் இறந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்கைகொண்டான் புள்ளிமான்கள் சரணாலயத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் விபத்துகள், நாய்கடி சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே கங்கைகொண்டான் காப்புக்காடு-1 பகுதி புள்ளிமான்கள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதை போன்று, மான்கள் அதிகமுள்ள தாழையூத்து காப்புக்காடு உள்ளிட்டவற்றையும் சரணாலயப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என வன ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
