நெல்லையில் டிச.9 நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம்
மத்திய அரசின் கட்டண உயா்வை கண்டித்து, திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை ( டிச. 9) நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அகில இந்திய அளவில் மோட்டாா் வாகனங்களுக்கான தகுதிச் சான்று பெறுவதற்கான கட்டணத்தை வாகனங்களின் மாடலுக்கு ஏற்ப மத்திய அரசு பல மடங்கு உயா்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயா்வைக் கண்டித்து, தென் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளா்கள் சம்மேளன கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலியில் லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து சங்கத் தலைவா் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் டிச. 9-ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன. இதில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் பங்கேற்கின்றன. இப்போராட்டத்தால் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என்றனா்.

