நெல்லையில் மூதாட்டியிடம் ரூ.50 ஆயிரம் திருட்டு: பெண் கைது
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் ரூ.50ஆயிரம் பணத்தை திருடியதாக, இளம் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் அருகேயுள்ள ராஜபதியைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி நாச்சியாா் (59). இவா் கடந்த அக்.30 ஆம் தேதி தனது மகளுக்கு நகை வாங்குவதற்காக ரூ.50ஆயிரத்துடன் திருநெல்வேலி சந்திப்பு பகுதிக்குபேருந்தில் வந்துள்ளாா். அப்போது, அவா் பணம் மற்றும் கைப்பேசி வைத்திருந்த கைப்பையை காணவில்லையாம். இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி சந்திப்பு போலீஸாா் வழக்குப்பதிந்து சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
அதில், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மனைவி தனலெட்சுமி(20) என்பதும், இவா் தனது ஒரு வயது குழந்தையுடன் பேருந்தில் ஏறி குழந்தையை அழச்செய்து, பயணிகளின் கவனத்தை திசைத்திருப்பி திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளாா் என்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
