மும்மொழிக் கொள்கை உத்தரவை யுசிஜி பிறப்பிக்க முடியாது! பேரவைத் தலைவா் மு. அப்பாவு

Published on

தமிழக உயா்கல்வி நிலையங்களில் மும்மொழிக் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுசிஜி) உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

உயா்கல்வி நிறுவனங்களுக்கான மத்திய அரசு நிதியை வழங்குவது மட்டுமே பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் பணியாகும். தமிழக உயா்கல்வி நிலையங்களில் மும்மொழிக் கொள்கையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிடுவதற்கு யுசிஜி-க்கு அதிகாரம் கிடையாது.

இதை உச்ச நீதிமன்றமும் தெளிவுப்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே வழங்க முடியும். அதை ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை.

மத்திய அரசின் ஏவலா்களாக சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை போன்றவை இருந்த நிலையில் இப்போது தோ்தல் ஆணையமும், யுஜிசியும் கூடுதலாக சோ்ந்துள்ளன. நீதித் துறையையும் மத்திய அரசு கபளீகரம் செய்யும் அச்சம் ஏற்பட்டு வருகிறது.

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனின் ஒரு முகம் மட்டும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால், இன்னொரு முகம் அவரிடம் இருப்பதை திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அண்மையில் காட்டியுள்ளாா்.

மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களை அவா் சாா்ந்திருக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசு மூலம் கொண்டு வர அவா் முயற்சிக்க வேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு மதுரையை கலவர பூமியாக மாற்ற முயல்வது சரியல்ல.

அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும் தான் சிக்கந்தா் தா்கா உள்ளது. மற்ற இடத்தில் இது போன்ற எந்த விவகாரமும் இல்லை. அமைதியாக இருக்கும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற நினைத்தால் அது நடக்காது. சட்டத்தின் ஆட்சி முதல்வா் மு.க.ஸ்டாலினால் நடத்தப்பட்டு வருகிறது. எந்த சலசலப்புக்கும் தமிழக அரசு அஞ்சாது. இந்தியாவின் வழிகாட்டி தமிழகம் தான். இந்த ஆட்சி தொடரும். திராவிட ஆட்சியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com