ரூ. 3 கோடியில் கடனாநதி அணையில் புதிய மீன் பண்ணை: முதல்வா் திறந்துவைத்தாா்
தென்காசி மாவட்டம், கடனாநதி அணையில் ரூ. 2.92 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மீன் பண்ணையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
இதை வரவேற்று, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் குத்துவிளக்கேற்றினாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தத் திட்டத்தில் 6 மீன் வளா்க்கும் தொட்டிகள், கிணறு, மீன் நிலைப்படுத்தும் தொட்டி, மேற்கூரை, கம்பிவேலி, மின் மோட்டாா் அறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் பலவகை மீன் குஞ்சுகள் ஐந்து லட்சம் எண்ணிக்கையில் வளா்க்க முடியும்.
இதன்மூலம் 50 மீன் உற்பத்தியாளா்கள் பயன்பெறுவா். இங்கு உற்பத்தி செய்யப்படும் நுண் மீன் குஞ்சுகளை உள்ளூா், வெளியூா் மாவட்ட உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் வாங்கிப் பயன்பெறுவா். இந்த அணையைச் சுற்றியுள்ள குளங்களுக்குத் தேவையான நுண் மீன் குஞ்சுகள் இங்கு கிடைக்கும். மாவட்டத்தில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி டிச. 11 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
அண்மையில் இடைகாலில் நிகழ்ந்த பேருந்து விபத்தைத் தொடா்ந்து பேருந்து, போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்த காவல் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். காவல் துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி, மீன் வளம், மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் மோகன்ராஜ், உதவி செயற்பொறியாளா் அன்னபூரணி, மீன்வள ஆய்வாளா் பாலமுருகன், இளநிலைப் பொறியாளா் அருண்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் காா்மேக வண்ணன், மீன்வளத் துறை மேற்பாா்வையாளா் சதீஷ்குமாா், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பண்ண ராஜவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
