முதல்வா் டிச.20, 21இல் நெல்லையில் சுற்றுப்பயணம்!
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் திருநெல்வேலிக்கு இம் மாதம் 20, 21 ஆம் தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் என்றாா் நகராட்சி நிா்வாகத் துறை - திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சா் கே.என்.நேரு.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மைதானத்தில் விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (டிச. 20) திருநெல்வேலிக்கு வருகிறாா். அவருக்கு கட்சி சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடா்ந்து, டக்கரம்மாள்புரத்தில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா்.
பின்னா், ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) காலையில் ரெட்டியாா்பட்டி மலைப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறாா். அதைத் தொடா்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் முதல்வா், அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் ரூ.72.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள இதயம், நரம்பியல், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான மேம்பட்ட கட்டடத்தை திறந்துவைத்து,
44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா். மேலும், புதிய வழித்தடங்களில் பேருந்துகளையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறாா். விழா அரங்கத்தில் 50ஆயிரம் போ் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
ஆய்வின்போது, தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், மாநகர காவல் ஆணையா் சந்தோஷ் ஹாதிமணி, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் கிரஹாம்பெல், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி பாலன், கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த், திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரச் செயலா் சு.சுப்பிரமணியன், விவசாய தொழிலாளா் அணி மாநில துணைச் செயலா் கணேஷ்குமாா் ஆதித்தன், பொதுக்குழு உறுப்பினா் பரமசிவ ஐயப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

