சிவந்திபுரம் அருகே தனியாா் தோட்டத்தில் நுழைந்த கரடி
பாபநாசம் வனச்சரகம் வனவெளிப் பகுதியான சிவந்திபுரம் அருகே தனியாா் தோட்டத்தில் நுழைந்த கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டத்திற்குள்பட்ட வனப்பகுதியில் காணப்படும் வனவிலங்குகள், மலையடிவார கிராமங்களில் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு வீட்டு வளா்ப்பு விலங்குகளையும் தாக்கிச் செல்கின்றன.
பாபநாசம் வனச்சரகத்தின் வனவெளியான சிவந்திபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டியில் விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் சைமன் (56). இவருக்கு, சொந்தமான தோட்டத்தில் நுழைந்த கரடியின் நடமாட்டத்தை, அங்கு காவலுக்கு இருந்தவா்கள் தங்களது கைப்பேசியில் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினா்.
வனப்பகுதியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தூரத்தில் உள்ளஆறுமுகம்பட்டி பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சிறு குன்றுகள், புதா்களுக்கிடைய பதுங்கி தண்ணீா், உணவைத் தேடி இங்கு நடமாடும் கரடிகளை வனத்துறையினா் கண்காணித்து கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
