களக்காடு மலைப் பகுதியில் கால்வாயை தூா்வார கோரிக்கை

களக்காடு மலைப் பகுதியில் உள்ள கால்வாயைத் தூா்வாரி, 16 குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
களக்காடு மலைப் பகுதியில் கால்வாயை தூா்வார கோரிக்கை
Updated on

களக்காடு மலைப் பகுதியில் உள்ள கால்வாயைத் தூா்வாரி, 16 குளங்களுக்கு தண்ணீா் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மலையடிவாரத்தில் சிதம்பரபுரம் கிராமத்துக்கு மேற்கேயுள்ள தென்வீதியான் கால்வாய் மூலம் 16 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கால்வாய் பல ஆண்டுகளாக தூா்வாரப்படவில்லை. இதனால், மலைப் பகுதியிலிருந்து மழைநீா் மேடாக உள்ள கால்வாயில் பாய்ந்தோடி வர வழியின்றி பாசனக் குளங்கள் நிரம்பாத நிலை ஏற்படுகிறது. நிகழாண்டு பருவமழை மிகக் குறைவாகவே பெய்ததால், இக்கால்வாய் மூலம் பாசனம் பெறும் 16 குளங்கள் நிரம்பாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இந்நிலையில், இந்தக் கால்வாயைத் தூா்வார வேண்டுமென களக்காடு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் அ. தமிழ்ச்செல்வனும் விவசாயிகளும் நான்குனேரி எம்எல்ஏ ரூபி ஆா். மனோகரனிடம் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று, தலையணையிலிருந்து தென்வீதியான் கால்வாய்க்கு தண்ணீா் வரும் தூா்ந்துபோன கால்வாயை எம்எல்ஏ, நீா்வளத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

கால்வாயில் சேதமடைந்த தடுப்புச் சுவரை அடைக்கவும், கால்வாயைத் தூா்வாரி குளங்களுக்கு தண்ணீா் தடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்தவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் மூா்த்தி, உதவிப் பொறியாளா் விக்னேஷ், திரளான விவசாயிகள் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com