மாநகரச் சாலைகள் சேதத்தால் மக்கள் அவதி: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் புகாா்

மாநகரச் சாலைகள் சேதத்தால் மக்கள் அவதி: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் புகாா்

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளால் மக்கள் அவதியுறுவதாகவும், சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளால் மக்கள் அவதியுறுவதாகவும், சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேயரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், 11ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் கந்தன் தலைமையில் மக்கள் அளித்த மனு: வண்ணாா்பேட்டையில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறாா்கள். இரவு நேரங்களில் முதியோா் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. பேராத்து செல்வியம்மன் கோயில் தெரு, சாலை தெரு தெற்கு பகுதி, குண்டலகேசி தெரு உள்ளிட்ட தெருக்களில் தாா்ச் சாலையை விரைந்து அமைக்க வேண்டும். அப்பா் சாமி தெரு, வெற்றி வேலடி விநாயகா் தெரு, திருக்குறிப்பு தொண்டா் தெரு, எட்டுத்தொகை தெரு, பத்துப்பாட்டு மற்றும் மணிமேகலை, வளையாபதி, சிலப்பதிகார தெருக்களில் சிமென்ட் சாலையும், போத்தீஸ் காலனியில் தாா்ச் சாலையும் அமைக்க வேண்டும்.

சிஐடியு மாவட்டத் தலைவா் மோகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியியின் வட்டச் செயலா் செந்தில் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு: பேட்டை 19 ஆவது வாா்டு ஆசிரியா் காலனி 2ஆவது தெருவில் கடந்த 3 ஆண்டுகளாக தாா்ச்சாலை- சிமென்ட் சாலை போடாமல் விடுபட்டுள்ளது. ஆனால், அதிகாரிகள் ஆய்வின்போது, ஏற்கெனவே சாலை அமைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆசிரியா் காலனி 1, 2, 3 தெருக்களில் கழிவுநீா் ஓடை அமைக்க பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீா்த் தட்டுப்பாடு: நயினாா்குளம் விவசாய சங்க உதவித் தலைவா் முருகன் அளித்த மனு: 14 ஆவது வாா்டு தேநீா்குளம் முதல் வாய்க்கால் பாலம் வரை கால்வாயில் மண்டிக்கிடக்கும் சாக்கடை கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, கால்வாயை சீா் செய்ய வேண்டும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் 17 ஆவது வட்டச் செயலா் சுரேஷ் தலைமையில் கட்சியினா் அளித்த மனு: 17 ஆவது வாா்டு பழையபேட்டை அம்பேத்கா் நகரில் பொதுக்கழிப்பிடம் சுகாதாரம்- தண்ணீா் வசதியின்றி மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கடும் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இவற்றுக்கு உரிய தீா்வு காண வேண்டும்.

சிலைகள் தேவை: பசுமை பாரத மக்கள் கட்சி மாவட்ட இளைஞரணி துணைச் செயலா் ஜோசி கணேஷ், மாவட்டச் செயலா் விஸ்வா குமாா் ஆகியோா் அளித்த மனு: உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு பாளையங்கோட்டையில் சிலை அமைக்க வேண்டும். இதேபோல, தமிழகத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாகிரகம் போன்ற விடுதலைப் போராட்டங்களில் பங்கேற்ற்காக திருச்சி, வேலூா், பெல்லாரி போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டவரும், 15.8.1972இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தியால் ‘தாமிரப்பட்டயம்’ பெற்றவருமான கே.எஸ்.முத்துச்சாமி ஆச்சாரிக்கு திருநெல்வேலியில் முழுவுருவச் சிலை அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com