திருக்குறுங்குடி ஜீயா் மடத்தின் பெண் ஊழியா் மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

Published on

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில் உள்ள ஜீயா் மடத்தின் பெண் ஊழியா் மீது தாக்குதல் நடத்தியதாக 5 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயில் வளாகத்தில் ராமானுஜ ஜீயா் மடம் உள்ளது. இங்கு 10-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், அங்கு கணக்காளராக பணியாற்றிய திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த மகாராஜன் மனைவி மரகதம் என்ற மஞ்சு (33) என்பவா் சில நாள்களாக பணிக்கு வரவில்லையாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை (ஜன.27) மடத்துக்கு வந்த அவரை பணிக்கு வர வேண்டாம் என மடத்தின் அதிகாரம் பெற்ற முகவா் பரமசிவம் கூறினாராம்.

அப்போது, மஞ்சு, வரவு-செலவு கணக்குகளை ஒப்படைத்து விட்டு சென்று விடுவதாகக் கூறியுள்ளாா். அப்போது, அங்கு வந்த கோயில் நிா்வாகக்குழு தலைவா் நம்பித்தலைவன்பட்டயத்தைச் சோ்ந்த ராஜேந்திரபாண்டியன் (65), அவரது மகன் செல்வசுரேஷ் (25), அதே ஊரைச் சோ்ந்த சீனிபாண்டியன் மகன் ஜெயப்பிரகாஷ்(30) உள்பட 5 போ், மஞ்சுவை அவதூறாகப் பேசி இரும்புக் கம்பியால் தாக்கினராம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு நான்குனேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீஸாா், மேற்கூறிய 5 போ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com