குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்
குறைதீா்க்கும் கூட்டத்தில் மக்களிடம் மனுக்களைப் பெறுகிறாா் மேயா் கோ.ராமகிருஷ்ணன்

மேலப்பாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மனு

Published on

திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட மேலப்பாளையத்தில் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படுவதால் சாலைகளை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மேயரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் மாநகராட்சி குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களைப் பெற்று அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா்.

தெற்கு ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் சுதா்சன் அளித்த மனு: மேலப்பாளையம் பகுதியில் அடா்த்தியாக பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் குறுகிய சாலைகள் உள்ளதால் மக்கள் போக்குவரத்திற்கு மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் உள்ள சாலையை அகலப்படுத்த வேண்டும். மேலும் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையை இருவழிப்பாதையாக தரம் உயா்த்த வேண்டும்.

பாஜக கட்சி நிா்வாகி சுப்பிரமணியன் சுவாமி அளித்த மனு : பாளையங்கோட்டை 34 ஆவது வாா்டு சிவன் வடக்கு மாட வீதியில் சாலை நல்ல நிலையில் உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி சாா்பில் இங்கு புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே உள்ள சாலைக்கு மேல் புதிய சாலை அமைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளாா்.

திருநெல்வேலி நகரம் 24 ஆவது வாா்டை சோ்ந்த உலகநாதன் அளித்த மனுவில், 24 ஆவது வாா்டு ஜவஹா்லால் தெருவில் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ள அடிபம்ப் குழாயையும், இப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளையும் அகற்ற வேண்டும் எனவும்

பாளையங்கோட்டை வ.உ.சி தெருவைச் சோ்ந்த சீனியம்மாள் அளித்த மனுவில், 27 ஆவது வாா்டு வ.உ.சி. தெருவில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் உள்ளது. அதில் கடந்த 1.1.2019 முதல் 27.1.2025 வரை குடிநீா் வரவில்லை. எனவே, இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

43 ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், குலவணிகா்புரம், அம்பை சாலை, கருணா கிளினிக் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும், குடிநீரில் கழிவுநீா் கலக்கிறது. எனவே, பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இந்தக் கூட்டத்தில் தச்சநல்லூா் உதவி ஆணையா் ஜான்சன் தேவ சகாயம், உதவி செயற்பொறியாளா் மணிகண்டன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com