மணிமுத்தாறு பிரதான கால்வாயில் உடைப்பு
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூா் அருகே மணிமுத்தாறு பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் கால்வாயில் தண்ணீா் நிறுத்தப்பட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இக்கால்வாய் மூலம் திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன.
இக்கால்வாயில் மணிமுத்தாறு அணையில் இருந்து விநாடிக்கு 400 கனஅடி தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், அந்த அணையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் வீரவநல்லூா் புதூா் பகுதியில் கால்வாய் கரையில் மிகப்பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாக சென்றது. மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கால்வாய் அமைந்துள்ள பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக வந்ததால் உடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இத்தகவல் அறிந்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் உடனடியாக அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரை நிறுத்தவும், கால்வாய்க்கரையில் உடைப்பை சீரமைக்கவும் நடவடிக்கை எடுத்தனா்.