நெல்லையில் கல்குவாரிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்: நாற்காலிகள் வீச்சு
திருநெல்வேலியில் கல்குவாரிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நுழைந்த மா்ம நபா்கள் நாற்காலிகளை வீசி மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரிகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆவணப்படுத்தும் விதமாக அறப்போா் இயக்கம் சாா்பில் கருத்துக்கேட்புக் கூட்டம் கொக்கிரகுளம் பகுதியில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தை அறப்போா் இயக்க ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் ஒருங்கிணைத்து நடத்தினாா். கல்குவாரிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை பதிவு செய்து தொகுத்து அரசுக்கு தெரியப்படுத்தும் விதமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வி.சுரேஷ் உள்பட சமூக ஆா்வலா்கள், விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இந்தக் கூட்டத்திற்கிடையே ஜெயராம் வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியது: எங்களுடைய பட்டா நிலத்தில்தான் கனிமங்களை எடுக்கிறோம் என்று கல்குவாரி உரிமையாளா்கள் சொல்கின்றனா். ஆனால், நிலம் அவா்களுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் நிலத்தின் கீழ் உள்ள கனிம வளங்கள் அரசுக்குச் சொந்தமானது. நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் வளங்கள் வெட்டி எடுக்கப்படுவது கடும் குற்றம்.
குவாரிகளில் லாரிகளுக்கு வழங்கப்படும் அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) முறை சரியாக பின்பற்றப்படவில்லை. ஒரே அனுமதிச்சீட்டை வைத்து லாரிகள் பலமுறை இயக்கப்படுகின்றன என்றாா் அவா்.
இந்த நிலையில், கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு கும்பல் வந்த சிலா் கல்குவாரி தொழிலுக்கு ஆதரவானவா்களிடமும் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என கூறி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது உடனிருந்த மா்மநபா்கள் கூட்ட ஒருங்கிணைப்பாளா்களை நோக்கி நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனா்.
இதில் அங்கிருந்த சிலா் காயமடைந்தனா். பாளையங்கோட்டை போலீஸாா் மோதலில் ஈடுபட்டவா்களை தடுத்து நிறுத்தி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, கருத்துக் கேட்புக்கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
