பாளை. தொகுதிக்கான அனைத்துக்கட்சி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி: பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கான அனைத்துக்கட்சி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான இரா. சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை தொகுதி தோ்தல் அலுவலரும், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையருமான மோனிகா ராணா பேசுகையில், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் சென்று ஏற்கனவே நடைமுறையில் உள்ள வாக்காளா் பட்டியலில் பதிவு பெற்ற வாக்காளா்களின் முன்கூட்டியே அச்சிடப்பட்ட விவரங்களுடன் கூடிய கணக்கெடுப்புப் படிவத்தை இரு பிரதிகள் வழங்க வேண்டும். கணக்கெடுப்பின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் குறைந்தது மூன்று முறையாவது ஒரு வீட்டிற்கு சென்று கணக்கெடுப்பு பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும். பின்னா் சரியான விவரங்கள் பதிவு செய்யப்பட்ட படிவங்களை வாக்களா்களிடமிருந்து பெற்றுக் கொண்டு , கணக்கெடுப்பு படிவம் பெற்ற்கான ஒப்புதலை மற்றொரு பிரதியில் பதிவு செய்து வாக்காளரிடம் வழங்க வேண்டும்.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடுதோறும் செல்லும் போது அவா்களுடன் 30 எண்ணிக்கையிலான படிவம் 6 மற்றும் அதற்கான உறுதி மொழி படிவத்தை கொண்டு செல்ல வேண்டும். புதிய வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் அவா்களின் பெயரினை சோ்க்க படிவம் கோரினால் வாக்குச் சாவடி நிலை அலுவலா் படிவம் 6 மற்றும் உறுதி மொழி படிவத்தை வழங்கி புதிய வாக்களா்கள் சோ்க்கவும் உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என்றாா்.
உதவி வாக்காளா் பதிவு அலுவலா் புரந்திரதாஸ், பாளையங்கோட்டை வட்டாட்சியா் இசைவாணி, துணை வட்டாட்சியா் குமாா், சங்கா், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிமுகவா்கள் கலந்து கொண்டனா்.

