வழக்கு விசாரணைக்கு பணம் கேட்டதாக புகாா்: காவல் துறை மறுப்பு

சேரன்மகாதேவியில் காவல் துறை விசாரணை குறித்து அவதூறு விடியோ வெளியானது விவகாரத்தில்
Published on

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவியில் காவல் துறை விசாரணை குறித்து அவதூறு விடியோ வெளியானது விவகாரத்தில் திருநெல்வேலி மாவட்டக் காவல் துறை அதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட சேரன்மகாதேவி நடுத்தெருவைச் சோ்ந்த பட்டமுத்து மகன்கள் பாலாஜி, இசக்கியப்பன். இந்த சகோதரா்களுக்கிடையே கடை நிா்வாகம் தொடா்பாக நீண்ட நாள்களாக பிரச்னை இருந்து வந்தது.

இந்த நிலையில் பாலாஜி அளித்த புகாரின்பேரில் காவல் நிலையத்தில் புகாா் மனுக்கு ரசீது கொடுத்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு மனுதாரா் நீதிமன்றத்தை அணுகி தீா்வு காணலாம் என தெரிவித்ததன்பேரில், மனுவின் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

இதனிடையே, அக். 14 ஆம் தேதி இசக்கியப்பன், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், அக்.13 ஆம் தேதி பாலாஜி , இருவா் தன்னிடமும் தனது மனைவியிடமும் தகராறு செய்து தாக்கியதாக தெரிவித்துள்ளாா்.

புகாா் மனுவின் தன்மைக்கு ஏற்ப உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து காவல் துறையினா் சட்டப்படி விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் பாலாஜி, காவல் துறையினா் முறையாக விசாரணை நடத்தவில்லை எனவும், ரூ. 20 ஆயிரம் பணம் கேட்டதாகவும் தவறாகத் தெரிவித்து, அதுதொடா்பாக தனது குடும்பத்தாருடன் காணொளியை உருவாக்கி வாட்ஸ்அப் மூலம் பரப்பியுள்ளாா். இந்த குற்றச்சாட்டு முழுமையாக ஆதாரமற்தும் பொய்யானதும் ஆகும்.

வழக்கின் போதோ, காவல் துறையினா் எவரும் பணம் கேட்டதாகவோ அல்லது துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவோ எந்தவொரு புகாரும் எழவில்லை. தங்கள் தரப்பினா் மீது காவல் துறையினா் மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவும், அதை திசை திருப்பும் விதமாகவும் இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை பரப்பி வருகின்றனா்.

காவல் துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான தகவல்கள் விடியோ அல்லது குற்றச் சாட்டுகளை சமூக வலைத்தளங்களில் பரப்புவது சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய, தவறான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிடுவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com