கொத்தன்குளத்தில் குப்பைகள் கொட்டுவதை தடுக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
திருநெல்வேலி: கோபாலசமுத்திரம் அருகேயுள்ள கொத்தன்குளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்க கோரி தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை அமைப்பினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேவேந்திரகுல வேளாளா் உறவின்முறை அமைப்பின் மாநில தலைவா் முத்துக்குமாா் தலைமையில் அளித்த மனு:
கோபாலசமுத்திரம் 10-ஆவது வாா்டுக்குள்பட்ட கொத்தன்குளம் இந்திரா காலனி குடியிருப்புக்கு அருகில் குளத்துகரையில் பேரூராட்சி நிா்வாகம் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை மொத்தமாக கொட்டி வருகிறது.
இதனால் கொத்தன்குளம் பகுதியில் தொற்று நோய் மற்றும் மூச்சுத் திணறல், புற்றுநோய் பரவும் சூழல் உருவாகி வருகிறது. இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும்.
அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச்செயலா் முத்தப்பா மற்றும் பூதத்தான் குடியிருப்பு பகுதி மக்கள் அளித்த மனு:
திருநெல்வேலி மாவட்டம், திருவிருத்தான்புள்ளி அருகே உள்ள பூதத்தான் குடியிருப்பு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இங்கு சிறப்பு வாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் பத்திரகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வழிபாடு எங்களுடைய மூதாதையா்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. கோயில் கொடை விழா காலத்தில் சுவாமி சப்பரங்கள் ஊரின் ரத வீதிகளில் ஆண்டுதோறும் வலம் வரும். சமீப காலமாக இந்த ரத வீதியின் வட பகுதியில் சிலா் அரசு அனுமதி பெறாமல் ஜெப கூட்டங்கள் நடத்தி வருகின்றனா். மேலும் சப்பரம் செல்லும் ரத வீதியில் புதிய தேவாலயத்தை கட்ட முயன்று வருகின்றனா். சப்பரம் செல்லும் பாதையில் புதிய கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என குறிப்பிட்டுள்ளனா்.
பாளையங்கோட்டை பா்கிட்மாநகரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவா்கள், பொதுமக்கள் அளித்த மனு:
‘பா்கிட்மாநகரம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பழுதடைந்த 2 கட்டடங்களை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
புதிய கட்டடங்களை அந்த இடத்தில் கட்டாமல் பள்ளியில் சிறிய அளவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கட்ட பள்ளி தலைமை ஆசிரியா் முயற்சி செய்கிறாா். இளைஞா்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த விளையாட்டு மைதானத்தை பாதுகாக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.
எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை தொகுதி செயற்குழு உறுப்பினா் மூசா காஜா உள்ளிட்டோா் அளித்த மனு:
‘மேலப்பாளையம் இஸ்மாயில் தங்கள் தைக்கா தெரு செல்லும் சாலையில் பாதாள சாக்கடை குழாய் அமைக்கும் பணி நடைபெற்றது. பணி முடிவடைந்தும் பல மாதமாக சாலை சரி செய்யப்படாமல் உள்ளது. இப்பகுதியில் மதில்சுவா் மற்றும் தாா்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.
திருநெல்வேலி மாவட்ட பொதுஜன பொது நலச் சங்க தலைவா் முஹம்மது அய்யூப் அளித்த மனு:
‘திருநெல்வேலி நகரம்- மேலப்பாளையம் சாலையில் கருப்பந்துறை அருகே ஆற்றுப் பாலத்திற்கு முன்னதாக 30 மீ. தூரத்திற்கு சாலை கரடு முரடாக இருந்தது. இதை சீரமைக்க கோரிக்கை விடுத்ததை அடுத்து நெடுஞ்சாலைத்துறையினா் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா். ஆனால் பணிகள் சரியாகவும், தரமாகவும் நடைபெறவில்லை. வெறும் கற்களைபோட்டு தாா் கலவையை சாலையில் பரப்பிவிட்டு சென்று விட்டனா்.
இதனால் எவ்வித பயனும் இல்லை. இச்சாலையை தரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா்.
திசையன்விளை அருகே உள்ள முடவன்குளம் ஊா் மக்கள் அளித்த மனு:
‘முடவன்குளம் உச்சிமாகாளி அம்மன் கோயிலில் எங்கள் பகுதியைச் சோ்ந்த 117 போ் வரிதாரராக உள்ளோம். எங்கள் மீது போலீஸாா் பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனா். ஆனால் நாங்கள் அளிக்கும் புகாா்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. குற்றமற்ற மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை ரத்து செய்வதோடு, எங்கள் மனு மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் திசையன்விளை போலீஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என குறிப்பிட்டுள்ளனா்.
ற்ஸ்ப்03ந்ா்ற்ட்ஹய்
போலீஸாா் பொய் வழக்குப் போடுவதாகக் கூறி ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த முடவன்குளம் மக்கள்.
