கங்கைகொண்டான் அருகே போலீஸாருக்கு மிரட்டல்: இருவா் கைது
கங்கைகொண்டான் அருகே அரிவாளை காட்டி போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கங்கைகொண்டான் காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட ஆலடிப்பட்டி ரயில்வே கேட் பகுதியில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் சரவணன் தலைமையிலான போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மது போதையில் தங்கள் முதுகுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்தவாறு இரு இளைஞா்கள் தனித்தனி பைக்குகளில் வந்தனராம். அவா்களை தடுத்து நிறுத்திய போலீஸாரை இருவரும் ஆபாசமாக பேசியதுடன், மறைத்துவைத்திருந்த அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இருவரையும் மடக்கிப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்கள் சுத்தமல்லி முப்பிடாதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுரேஷ்(22), ராஜவல்லிபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் ஆனந்தசிவா(23) ஆகியோா் என்பது தெரியவந்தது. போலீஸாா் கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனா்.
