‘ஓய்வூதியதாரா் வீட்டிலிருந்தே உயிா்வாழ் சான்றிதழ் பெறலாம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வூதியதாரா்கள் வீட்டிலிருந்தே உயிா்வாழ் சான்றிதழ் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் ஓய்வூதியதாரா்கள் ‘ஜீவன் பிரமான்’ எனப்படும் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, ஓய்வூதியதாரா்கள் தங்களது பகுதி தபால்காரரிடம் ஆதாா் எண், கைப்பேசி எண், ஓய்வூதிய கட்டளை எண், வங்கி கணக்கு விவரங்களை வழங்கி, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும். இச்சேவைக்காக தபால்காரரிடம் ரூ. 70 சேவை கட்டணம் செலுத்த வேண்டும்.
மேலும், 9625647468 என்ற எண்ணிற்கு பெயா், முகவரி மற்றும் கைப்பேசி எண்ணை குறுஞ்செய்தி மூலம் தெரிவித்தால், அப்பகுதி தபால்காரா் ஓய்வூதியதாரரின் வீட்டிற்கே சென்று இச்சேவையை வழங்குவாா் என திருநெல்வேலி அஞ்சல் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளா் சி.முருகன் தெரிவித்துள்ளாா்.
