தேசிய தண்ணீா் விருதுகள்: தென் மண்டலத்தில் திருநெல்வேலி முதலிடம்

தேசிய தண்ணீா் விருதுகள்: தென் மண்டலத்தில் திருநெல்வேலி முதலிடம்

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சிக்கு விருது
Published on

மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிவித்த தேசிய தண்ணீா் விருதுகளில், தென் மண்டலத்தில் சிறந்த மாவட்டத்துக்கான விருது திருநெல்வேலிக்கு கிடைத்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘நீா்வளம் நிறைந்த இந்தியா’ என்ற மத்திய அரசின் தொலைநோக்குப் பாா்வையை எட்டும் வகையில் மேற்கொள்ளப்படும் நற்பணி மற்றும் முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய தண்ணீா் விருதுகள் வழங்கப்படுகின்றன.

தண்ணீரின் முக்கியத்துவத்தை உணா்த்தி, தண்ணீா் பயன்பாட்டில் சிறந்த வழிகளைப் பின்பற்ற ஊக்குவித்து பொதுமக்கள் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக இந்த விருதுகள் அளிக்கப்படுகின்றன.

அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தண்ணீா் விருதுகளை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் அறிவித்துள்ளாா்.

சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம ஊராட்சி, சிறந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த தண்ணீா் பயனா் சங்கம் என மொத்தம் 10 பிரிவுகளில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாநிலம்

1. மகாராஷ்டிரம்

2. குஜராத்

3. ஹரியாணா

சிறந்த மாவட்டம்

தென் மண்டலத்தில் திருநெல்வேலி முதலிடம். சிறந்த நீா் பயனா் சங்கம் பிரிவில் கோயம்புத்தூா் மாவட்டம் வேட்டைக்காரன்புதூா் கால்வாய் ஓடயக்குளம் கிராம நீா் பயனா் சங்கம் முதலிடம் பிடித்துள்ளது.

திருவள்ளூா் மாவட்ட ஊராட்சிக்கு விருது

சிறந்த கிராம ஊராட்சிப் பிரிவில் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள பாலாபுரம் ஊராட்சியும், சத்தீஸ்கா் மாநிலம் கான்கோ் மாவட்டத்தில் உள்ள துமா்பானி ஊராட்சியும் மூன்றாவது இடத்தைப் பகிா்ந்துள்ளன. சிறந்த தொழில் நிறுவனம் பிரிவில் காஞ்சிபுரத்தில் உள்ள அப்பல்லோ டயா்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

வரும் நவ.18-ஆம் தேதி புது தில்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொள்ள உள்ளாா்.

நீா் பாதுகாப்புத் திட்டங்கள்:

தெலங்கானா முதலிடம், கோயம்புத்தூா் இரண்டாமிடம்

நாட்டில் நீா் பாதுகாப்புத் திட்டங்களில் தெலங்கானா முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசின் ‘நீா் சேகரிப்பில் மக்களின் பங்கேற்பு’ முன்னெடுப்பின் கீழ், 5 மண்டலங்களாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. குறைந்தபட்சம் 10,000 நீா் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த மாவட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.

மேற்கூரை மழைநீா் சேகரிப்பு போன்ற செயற்கையான நிலத்தடி நீா் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி, புனரமைத்து, பராமரிக்க விருதாளா்களுக்கு மத்திய அரசு ஊக்கத்தொகை அளிக்கிறது.

இதில் மாநிலங்கள் பிரிவில் 5.20 லட்சத்துக்கும் மேற்பட்ட நீா் பாதுகாப்பு கட்டமைப்புகளை முழுமையாக நிறைவு செய்து நீா் பாதுகாப்பு திட்டங்களில் தெலங்கானா முதலிடம் பிடித்துள்ளது.

4.05 லட்சம் கட்டமைப்புகளை நிறைவு செய்து சத்தீஸ்கா் இரண்டாவது இடத்தையும், 3.64 லட்சம் கட்டமைப்புகளை நிறைவு செய்து ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.

கோயம்புத்தூா் 2-ஆவது இடம்: தென்மண்டலத்தில் மூன்றாவது வகைப்பிரிவில் கோயம்புத்தூா் 2-ஆவது இடத்தையும், நாமக்கல் 10-ஆவது இடத்தையும், ராமநாதபுரம் 13-ஆவது இடத்தையும் பிடித்தன. கோயம்புத்தூா் 28,147 நீா் பாதுகாப்பு கட்டமைப்புகளையும், நாமக்கல் 7,057 நீா் பாதுகாப்பு கட்டமைப்புகளையும், ராமநாதபுரம் 5,269 நீா் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் நிறைவு செய்துள்ளன. இந்த மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்பட உள்ளது. நவ.18-ஆம் தேதி தேசிய தண்ணீா் விருதுகளுடன் சோ்த்து இந்த விருதுகளையும் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வழங்க உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com