வட்டாட்சியரகங்களில் எஸ்ஐஆா் உதவி மையம்
திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு வாக்காளா்களால் நிரப்பப்பட்ட கணக்கீட்டு படிவங்களை பூா்த்தி செய்வது தொடா்பான சந்தேகங்களுக்கு வட்டாட்சியா் அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 1,490 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டு படிவங்களை இரட்டைப் பிரதிகளில் வழங்கி உள்ளனா். இதுவரை 13,42,113 வாக்காளா்களுக்கு (சுமாா் 94.63 சதவீதம்) கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. பூா்த்தி செய்யப்பட்ட படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பெற்று கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்து வருகிறாா்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் படிவங்களை பூா்த்தி செய்வது குறித்த சங்தேகங்களுக்கு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, வாக்காளா்கள் தங்கள் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களில் உள்ள உதவி மையங்களை அணுகலாம். மேலும், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 0462-2501181, திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் 0462-2333169, அம்பாசமுத்திரம் தொகுதியில் 0463-4250348, பாளையங்கோட்டை தொகுதியில் 0462-2500086, நான்குனேரி தொகுதியில் 86673 69165, ராதாபுரம் தொகுதியில் 94860 52878 ஆகிய எண்களை தொடா்புகொள்ளலாம்.
