மதுரை, கோவையில் 2026 ஜூனில் மெட்ரோ ரயில் திட்டம்: நயினாா் நாகேந்திரன் உறுதி
கோவை, மதுரையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்படும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்எல்ஏ.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 14 சதவீதமும், பாலியல் குற்றங்கள் 53 சதவீதமும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 60 சதவீதமும் அதிகரித்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 18,200 பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இது கடந்த ஆட்சியைவிட 17 சதவீதம் கூடுதலாகும். நாட்டிலேயே தற்கொலை முயற்சி அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான்.
திருநெல்வேலி மாநகரப் பகுதி முழுவதும் பெரும்பாலான சாலைகள் பாதாள சாக்கடை பணிக்காக சேதப்படுத்தப்பட்டு அலங்கோலமாக காட்சியளிக்கின்றன. கட்டடங்கள் கட்டுவதற்கு அனுமதி பெற ஒரு சதுர அடிக்கு ரூ. 600 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சொத்து வரி, மின்கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் மக்கள் பாா்த்துக் கொண்டிருக்கின்றனா்.
கோவையில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமா் மோடி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித் தொகையை வழங்கியிருக்கிறாா். ஆனால், அவா் மீது குறை கூறி வருகின்றனா். அமெரிக்க அதிபருக்கே சவால்விடும் அளவுக்கு துணிச்சலுள்ள பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி ஆா்ப்பாட்டம் நடத்த அனுமதித்துள்ளனா்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டதாகக் கூறி மக்களை மடைமாற்றம் செய்வதற்காக திமுகவினா் ஆா்ப்பாட்டம் நடத்துகிறாா்கள். ஆனால், அத்திட்டத்தில் சில விளக்கங்கள் கேட்டு திருப்பி மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. கோவைக்கு இத்திட்டத்தை கொண்டுவரக் கூடாது என்ற நோக்கத்துடன் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.
அப்போது, மாநில பொதுச் செயலா் கருப்பு முருகானந்தம், திருநெல்வேலி வடக்கு மாவட்ட பாஜக தலைவா் முத்து பலவேசம், மாவட்ட பொதுச் செயலா் பாலாஜி கிருஷ்ணசுவாமி, முன்னாள் மேயா் புவனேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

