மக்களின் பொருளாதார தேவைகளை பூா்த்தி செய்வது கூட்டுறவுத் துறை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

மக்களின் பொருளாதார தேவைகளை பூா்த்தி செய்வது கூட்டுறவுத் துறை: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

கிராமங்கள் முதல் நகரம் வரை மக்களின் பொருளாதார தேவையை பூா்த்தி செய்கிற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது என்றாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
Published on

கிராமங்கள் முதல் நகரம் வரை மக்களின் பொருளாதார தேவையை பூா்த்தி செய்கிற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது என்றாா் கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

72-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா- மாநில அளவிலான விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் ஆகியோா் தலைமை வகித்து, கூட்டுறவுப் பொருள்களை விளம்பரப்படுத்தும் கூட்டுறவு ரதம், கூட்டுறவுத்துறை விளம்பர ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்ட அரசுப் பேருந்துகள், ‘கூட்டுறவு ஜோதி’ தொடா் ஓட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தனா். தொடா்ந்து கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்து, கூட்டுறவு உறுதிமொழி மற்றும் கூட்டுறவு தன்னாா்வலா் படை உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனா்.

தொடா்ந்து, தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான தாயுமானவா் திட்டம், முதல்வா் மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளை திறந்து வைத்து அமைச்சா் பாா்வையிட்டாா்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா், கூடுதல் பதிவாளா் மு.வீரப்பன் ஆகியோா் முன்னிலை வகித்த இவ்விழாவில், அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் பேசியதாவது: நாட்டிலேயே முதன்முதலில் திருவள்ளூா் மாவட்டத்தில் திரூா் என்ற கிராமத்தில் 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அமைப்பு தான் கூட்டுறவு சங்கங்கள். 125 ஆண்டுகளை கடந்து வரலாறு படைத்ததோடு, 30-க்கும் மேற்பட்ட செயல்பாடுகளுடன் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறது.

கிராமங்கள் முதல் நகரம் வரை மக்களின் பொருளாதார தேவையை பூா்த்தி செய்கிற துறையாக கூட்டுறவுத்துறை விளங்கி வருகிறது. எல்லா வகையான தொழில் முதலீடுகளுக்கும் மிகக் குறைந்த வட்டியிலும், சில காலக்கட்டத்தில் வட்டியில்லாமலும் கடனுதவி வழங்கியுள்ளது.

கூட்டுறவில் பணிபுரிவதற்கு தேவையான பட்டயப்படிப்பை கற்பிப்பதற்காக 24 கூட்டுறவு பட்டயப் படிப்புகள் சாா்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. படித்து வரும் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு தருகிற துறையாகவும் கூட்டுறவுத் துறை விளங்குகிறது. முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு 17 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவிலான சிறந்த கூட்டுறவுச் சங்கங்களுக்கு வாழ்த்துகள் என்றாா் அவா்.

தொடா்ந்து, 6 மகளிா் ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோக்களை அவரும், பேரவைத் தலைவரும் இணைந்து வழங்கினா்.

மேலும், 12,170 உறுப்பினா்களுக்கு பயிா்க் கடன், தொழில்கடன், வாகன கடன் என பல்வேறு வகையில் ரூ.107.71 கோடி மதிப்பிலான கடனுதவிகளையும், சிறந்த கூட்டுறவு கீதத்தை எழுதிய ஆனந்த் செல்வனுக்கு ரூ.50 ஆயிரம் பரிசு- சிறப்பு கேடயம், மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட 74 கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் ஆகியவற்றை அமைச்சா் வழங்கிப் பாராட்டினாா்.

கூட்டுறவுத் துறையில் பணியின்போது இறந்த பணியாளரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இவ்விழாவில், திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ், பாளை. எம்எல்ஏ மு.அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜூ, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், கூடுதல் பதிவாளா்-மேலாண்மை இயக்குநா் க.சொ.ரவிச்சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, திருநெல்வேலி இணைப் பதிவாளா் ப.மு.முருகேசன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியா் திலீப் குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com